திங்கள், 13 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

தீபத்தை குளிர வைக்கும் முறைகளும் அதன் சிறப்புகளும்...!!

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது.  இது கெடுதலைக்  கொடுக்கும். 
 
தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. வாயால் ஊதி அணைக்கக்கூடாது. 
 
பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன. தீபத்தை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை (எண்ணெய் அமிழ்ந்திருக்கும் நுனியை) ஓம் சாந்த ஸ்ரூபிணே நம என்று சொல்லி பின்புறமாக இழுக்க  வேண்டும். அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும்.
 
தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை  வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். 
 
திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன்  சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.
 
கிராமங்களில், திருவிளக்கை தாய் என்றும், நாச்சியார் என்றும் அழைப்பது வழக்கம். இதை விநாயகரின் வடிவம் என்றும் சொல்வதுண்டு. திருவிளக்கு வழிபாடு செய்யும் போது, விநாயகருக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களைப் பாடி, பொட்டு வைத்து, மாலை அணிவித்து,  தூபதீபம் காட்டினால் நிலைத்த பலன் கிடைக்கும்.