தைப்பூச நாளில் முருக கடவுளுக்கு காவடி எடுப்பது ஏன்...?
தைப்பூச நன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகிறது. சிவசக்தி ஐக்கியம் இந்த நாளிலேயே நிகழ்ந்ததாகக் கொள்ளப்படுகிறது.
சிவனின்றி சக்தியில்லை. சக்தியின்றி சிவனில்லை என்று கூறப்படுகிறது. அதாவது சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயக்கம் நிகழ்ந்தது என்பது பொருளாக அமைகிறது.
தைப்பூச தினம் - தை மாதம் உத்தராயண காலத்தில் ஆரம்பம். சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடக ராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க, சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடன் இணைந்த பவுர்ணமியில் நிகழும். இந்த சிறப்பு மிக்க தினம்தான் தைப் பூச தினம்.
சிவசக்தி இணைந்த இந்தப் புண்ணிய தினத்தில் முதலில் உருவாகியது நீர், அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் உருவாகின என்றும் நம்பிக்கை கொள்கிறோம். எனவே உலக இயக்கத்துக்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்க்கப்பட்ட வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இந்தத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்கிறோம். இது வழிவழியாக இந்துக்கள் கைக்கொண்டுவரும் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகிறது.
தைப்பூசத்தில் முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில் முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர்.
இந்தத் தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவது சிறப்பாகும். இயலாதவர்கள் புண்ணிய நதிகளை நினைத்துப் போற்றி வழிபட்டு நீராடுதல் வேண்டும். வாழ்வில் ஒளியேற்றும் தைப்பூச நன்னாள் பல நற்செயல்கள் தொடங்கும் நாளாக அமைகிறது.