கரூர்: அருள்மிகு ஸ்ரீ அடியார்க்கு எளியர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி நிகழ்ச்சி
கரூர் அருகே உப்பிடமங்கலத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அடியார்க்கு எளியர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்ச்சியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கரூர் அருகே புலியூர் பகுதியை அடுத்த உப்பிடமங்கலத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அடியார்க்கு எளியர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. உப்பிடமங்கலத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கிளிசேர்மொழிமங்கை உடனுறையாகிய அடியார்க்கு எளியர் ஆலயமானது தென்னிந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது. மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு பலவகை வண்ண மலர்களினால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. கற்பூர ஆரத்தி, கும்ப ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி உள்ளிட்ட பல்வேறு ஆரத்திகள் மூலவர் அம்பாளுக்கும் ஈசனுக்கும் காட்டப்பட்டதோடு, மஹா தீபாராதனையும் காட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து நந்தி எம்பெருமானுக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அடியார்க்கு எளியர் ஈசனின் அருள் பெற்றனர்.