திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கோலம் போடுவதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா....?

தமிழர்களுடைய வாழ்க்கை முறை என்பது இயற்கையோடு இணைந்த வாழ்கிற வாழ்க்கை முறை. மற்றவர்களை விட நாம் இயற்கையை  நேசிக்கக் கூடியவர்கள்.
பொதுவாக கோலம் என்பது அந்த வீட்டினுடைய ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும். இதேபோல் கோலம் போடுவதற்கும் முறைகள் உள்ளது.
 
குணிந்து பெருக்குதல், குணிந்து கோலமிடுதல் இதெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து,  கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச்  தரக்கூடியது.
 
பசு சாணத்தாலோ, தண்ணீராலோ தெளிக்கும் போது வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகிறது. மேலும் தண்ணீரில் மஞ்சள் கலந்து தெளிக்க  வேண்டும். இதில் முதலில் தண்ணீர் தெளித்து பிறகுதான் பெருக்க வேண்டும். இதனாலும் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது. நமது  இல்லத்திற்கு தினசரி தேவர்கள், லட்சுமி எல்லாம் வருகிறார்கள் என்று ஐதீகம் இருக்கிறது. அவர்களை வரவேற்கும் விதமாகவும் ஒரு மங்களச் சின்னமாக தமிழர்கள் வாழ்க்கை முறையில் இருந்து கொண்டு இருக்கிறது.


 
அதிலும் அந்த மாக்கோலம் இடுதல் என்பது தனிச்சிறப்பு. பச்சரிசி மாவு இடித்து அதில் கோலமிடும் போது நம்முடைய தயாள குணம்  வெளிப்படும் விதமாக, எறும்பு, ஈ எல்லாம் சாப்பிடுவதற்கு தானம், தர்மம் செய்வது மாதிரியானதும் இருக்கிறது.
 
கோலம் போடும்போது சிக்கல்கள் இல்லாத பூ கோலங்கள் போடுவது நல்லது. நடுவில் பூ வைப்பது மிகவும் நல்லது. கோல கட்டுகள், சாக் பீஸ் போன்றவற்றில் போடுவதை காட்டிலும், அரிசி மாவு கோலம் போடுதல் நலம் தரும்.
 
அதனால் கோலமிடுதல் என்பது ஒரு சடங்கு சம்பிரதாயம் எல்லாம் கிடையாது. நம்ம வீட்டை நல்ல முறையில் அலங்கரித்தல் மற்றும்  வரவேற்றல், உபசரிக்கும் குணம் மேலும் மங்களகரமாக இருக்கிறது என்பதற்காகவும் போடப்படுகிறது.