1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஐப்பசி மாத கார்த்திகை விரதத்தின் சிறப்புகள் !!

ஐப்பசி மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. கார்த்திகை விரதம் என்பது முருகப்பெருமானை மனதில் எண்ணி விரதம் மேற்கொண்டு கடைபிடிக்கப்படும் வழிபாட்டு முறையாகும்.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து கார்த்திகேயன் என்று பெயர் பெற்ற முருகப்பெருமான் அருளை பெறுவதற்கு மேற்கொள்ளும் ஒரு விரதமுறை தான் இந்த கார்த்திகை விரதம்.
 
முருகனை எண்ணி நோற்கக்கூடிய முக்கிய விரதங்களுள் கார்த்திகை விரதமும் ஒன்று. ஐப்பசி மாத கார்த்திகை விரதம் மேற்கொள்ள இருப்பவர்கள் அதிகாலையில் நீராடி முருகனை வழிபட வேண்டும்.
 
பிறகு பகலில் உறங்காமலும், உணவு உண்ணாமலும் முருகனைப் பற்றி சிந்தனை செய்து தீயச்செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். மேலும் முருகனின் மந்திரங்கள், கந்த புராணம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா போன்றவற்றை படிப்பதும், பாராயணம் செய்வதும் சிறந்தது. 
 
விரதம் இருக்க முடியாதவர்கள் பழம் மற்றும் பால் ஆகியவற்றை உண்ணலாம். ஐப்பசி மாத கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. 
 
ஐப்பசி மாத கார்த்திகை தினத்தில் பகல் மற்றும் இரவு உறங்காமல், முருகனை வழிபாடு செய்து, மறுநாள் காலையில் நீராடி முருகனை வழிபட்ட பின்பு விரதத்தை முடிக்க வேண்டும்.
 
ஐப்பசி மாதம் கார்த்திகை தினத்தன்று விரதமிருப்பவர்கள் அன்றைய தினத்தில் அன்னதானம் செய்தால் புண்ணிய பலன்கள் கிடைக்கும். 
 
மேலும் முருகனின் அருளால் நோய்கள் மற்றும் துஷ்ட சக்திகளின் பாதிப்புகள் நீங்கும். அதுமட்டுமல்லாமல் நன்மக்கட்பேறு, செழிப்பான பொருளாதார நிலை, நீண்ட ஆயுள் ஏற்படும்.
 
இவ்விரத முறையினை தொடர்ந்து பனிரெண்டு ஆண்டுகள் பின்பற்றுபவர்கள் வாழ்க்கையின் பெரும்பேற்றினையும், இறுதியில் முக்தியையும் பெறுவார்கள்.