முருகப்பெருமான் கார்த்திகை வழிபாடு வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி....?
மாதங்களில் கார்த்திகை மாதம் முருகனுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. அது போல் கார்த்திகை நட்சத்திரம் வரும் அன்று முருகனுக்கு விசேஷமான பூஜைகளும், வழிபாடுகளும் கோவில்களில் செய்யப்படுவது வழக்கம்.
கார்த்திகை நட்சத்திரம் அன்று அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷமான வழிபாடுகளும் அன்னதானமும் நடைபெறும். அதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தீராத நோய் எல்லாம் தீரும் என்பது ஐதீகம்.
அன்று காலையில் எழுந்து வீடு முழுவதும் துடைத்து சுத்தம் செய்து, பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மாலை 6 மணிக்கு இந்த பூஜையை செய்ய வேண்டும்.
பூஜையில் முருகன் படத்தை வைத்து சந்தன, குங்குமம் இட்டு மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். முருகன் சிலை வைத்திருப்பவர்கள் தண்ணீர், பால், மற்றும் பன்னீர் அபிஷேகம் செய்து கொள்வது நல்லது.
கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட ஆறுமுகனை வணங்கும் விதமாக 6 அகல் விளக்குகளை தயார் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் இது போல் அந்த அகல் விளக்குகளை வைத்தே பூஜையும் செய்யலாம். அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றலாம்.
ஆறுமுகனுக்கு ஆறு விளக்குகள் 6 மணிக்கு ஏற்றி வைத்து கார்த்திகை விரதம் இருந்து உணவேதும் உண்ணாமல் இருப்பவர்களுக்கு திருமண தடை, தொழில் தடை, வருமான தடை, மனக்கஷ்டம், குழப்பம் என்று எந்த பிரச்சனைகளும் எளிதில் தீர்வதாக ஐதீகம் உள்ளது. காலையில் இருந்து மாலை விளக்கேற்றி முடியும் வரை விரதத்தை மேற்கொள்ள வேண்டும். விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் பாலும், பழமும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.