திங்கள், 13 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பங்குனி உத்தர நாளில் நடந்தேறிய தெய்வ திருமணங்கள் என்ன தெரியுமா...?

ஒவ்வொரு மாதமும் உத்திர நட்சத்திரம் வந்தாலும் பங்குனி மாதத்தில் பங்கு பெறுகிற உத்திரம் தனிச்சிறப்பு பெறுகிறது.


சிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர்  என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். 
 
சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார்  என்பது ஐதீகம்.
 
இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து,  தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள்.
 
பங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக் காட்டுகின்றது. இத்தினத்தில்  அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம்  அனுஷ்டிப்பர். இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர்.
 
இத்தினத்தில் பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தார். ராமன், சீதையை கரம் பிடித்தார். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஸ்ரீ  ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது.
 
இளைஞர்களும், கன்னிகளும் இத்தினத்தில் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில்  திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது. விஷேசமான இத்திருநாளில் விரதம் இருப்பதும் அன்னதானம் வழங்குவதும் நம் முன்வினைகளை நீக்கி நலம்  அருளும்.