திங்கள், 4 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஆடிக்கிருத்திகை விரதம் கடைப்பிடிப்பதால் உண்டாகும் பலன்கள்...!!

கிழமைகளில் செவ்வாயும், திதிகளில் சஷ்டியும், நடத்திரங்களில் கிருத்திகையும் முருகனுக்கு உகந்தது. மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வரும். ஓரிரு மாதத்தில் மாதத்திற்கு இரு கிருத்திகை நட்சத்திரம் வரும்.

கிருத்திகை தினம் அனைத்து கோவில்களிலும் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பெரும்பான்மையோர் விரதமிருந்து அவரவர் இல்லத்தில் கிருத்திகை வழிபாடும் நடக்கும்.

இவ்வாறு மாதந்தோறும் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் வருடத்திற்கு மூன்று கிருத்திகை தினத்தில் விரதமிருந்து வழிபாடு  செய்வர். இப்படி மூன்று கிருத்திகை தினத்தில் விரதமிருந்து முருகனை வணங்குபவர்களுக்கு, வருடத்தின் அனைத்து கிருத்திகைகளிலும் விரதமிருந்து வழிபட்ட  பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 
ஆடிக் கிருத்திகை, கார்த்திகை கிருத்திகை, தைக் கிருத்திகை என மூன்று கிருத்திகைகளே முக்கோடி கிருத்திகை என அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்தவை.  தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும்  செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.
 
கிருத்திகை விரதமிருப்பவர் அதிகாலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, வீட்டை தூய்மைப்படுத்தி காலை உணவெதும் உட்கொள்ளாமல் மதியம் உப்பில்லா உணவை முருகனுக்கு படைத்து அதை உண்டு, இரவு பால் பழத்தோடு விரதத்தை முடிக்க வேண்டும்.
 
எல்லா முருகன் கோயில்களிலும் ஆடிக்கிருத்திகையன்று பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என விமரிசையாக பல  விழாக்கள், உற்சவங்கள் நடைப்பெறும். பழனி,. திருச்செந்தூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷமென்றாலும் திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை மிக விஷேசமாக நடைபெறும்.