ஞாயிறு, 28 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சுற்றுலா
  3. கடலோரம்
Written By அ‌ய்யநாத‌ன்
Last Updated : திங்கள், 16 ஏப்ரல் 2018 (14:39 IST)

கடற்கரையி்ன் எழிலைக் கூட்டும் வட்டக்கோட்டை

கடற்கரையி்ன் எழிலைக் கூட்டும் வட்டக்கோட்டை
கன்னியாகுமரிக் கடலின் எழிலை ரசிக்க பல்வேறு இடங்கள் இருந்தாலும், கடலோரத்தில், அதுவும் அலைகளின் சீற்றத்திற்கிடையே கட்டப்பட்டுள்ள வட்டக்கோட்டையில் இருந்து கடலை ரசிப்பது தனி்ச் சிறப்பாகும்.



18வது நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராக இருந்த மார்த்தாண்ட வர்மன் காலத்தில், அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, திருவிதாங்கூர் இராணுவத்தின் தளபதியாக இருந்த யூஸ்டாசியஸ் டி லன்னாய் (இவர் டச்சுக்காரர்களின் கப்பற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்) மேற்பார்வையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கிழக்குக் கரையை பாதுகாக்கக் கட்டப்பட்டதாகும்.

கடற்கரையி்ன் எழிலைக் கூட்டும் வட்டக்கோட்டை
webdunia photo WD
இந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் 300க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் எப்போதும் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், கோட்டை மதில் சுவரையொட்டிய மேல் தளத்தில் பல திசைகளை நோக்கியவாறு பீரங்கிகள் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இப்போது அங்கு ஒரு பீரங்கி கூட இல்லை.

ஆனால் அந்த இடத்தில் இருந்து நாம் காணக்கூடிய காட்சி: தூரத்தில் விவேகானந்தர் பாறையும், திருவள்ளுவர் சிலையும், அதற்கு நேர் எதிர்த் (வட) திசையில் பல்லாயிரக்கணக்கான காற்றாலைகளும், அவற்றின் முடிவில் கூடங்குளம் அணு மின் நிலையமும், கோட்டையின் மேற்குப் பகுதியில் பசுமையான மலைகளும், கிழக்கே பரந்து விரிந்த கடல் பகுதியுமாகும்.

கடற்கரையி்ன் எழிலைக் கூட்டும் வட்டக்கோட்டை
webdunia photo K. AYYANATHAN
கடலின் அலைகள் கோட்டைச் சுவரில் வந்து மோதித் திரும்புகின்றன. விசாலமான கோட்டையின் மையப் பகுதியில் ஒரு அழகிய குளம் உள்ளது. பெரிய பெரிய கருங்கற்களால் கட்டப்பட்ட இக்கோட்டை இந்த 300 ஆண்டுகளில் - அதுவும் 2004ஆம் ஆண்டு ஆழப்பேரலைத் தாக்குதலையும் தாண்டி பாதிக்கப்படாமல் அப்படியே நிற்பது ஆச்சரியமே.

இந்தக் கோட்டைக்குள்ளிருந்து வெகு தூரத்திற்கு ஒரு சுரங்கப் பாதை இருந்ததெனவும், ஆபத்து காலங்களில் அதன் வழியாக தப்பிச் செல்ல அது கட்டப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

கடற்கரையி்ன் எழிலைக் கூட்டும் வட்டக்கோட்டை
webdunia photo WD
இக்கோட்டையை தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. இக்கோட்டையை கண்டுவிட்டு பிறகு பத்மநாபபுரம் அரண்மணைக்குச் சென்று பார்க்க வேண்டும். வரலாற்றைப் புரிந்துகொள்ள அது உதவும்.

-புகை‌ப்பட‌‌ங்க‌ள் கா. அ‌ய்யநாத‌ன்