அன்னை மீது நம்பிக்கையும் முழுச் சரணாகதியும். - ஸ்ரீ அரவிந்தர்


Last Modified சனி, 28 அக்டோபர் 2017 (14:16 IST)
நமது திறமையின்மை பெரிய விஷயமல்ல - எல்லா மனிதரும் அவர்களுடைய இயற்கைப் பாகத்தில் திறமையில்லாதவர்களே. ஆனால் தெய்வ சக்தியும் உள்ளது. நீ அதில் நம்பிக்கைவைத்தால் திறமையின்மை திறமையாக மாற்றப்பட்டுவிடும், கஷ்டமும் போராட்டமுமே வெற்றியடைவதற்கான சாதனமாகிவிடும்.


 மனச்சோர்வு தவறான சக்திகளின் தாக்குதல்களுக்கு கதவு திறக்கும். இதுவே நீ எடுக்க வேண்டிய நிலை : "என்னால் முடிந்ததை நான் செய்வேன், உரிய காலத்தில் எல்லாம் நடக்கும்படி பார்த்துக்கொள்ள அன்னையின் சக்தி உள்ளது, இறைவன் உள்ளான்."

கலங்காமல், அமைதியுடனும், நம்பிக்கையுடனும் இருப்பதே சரியான மனப்பான்மை.

தோல்விகளும் தடுமாற்றங்களும் இருந்தால் அவற்றை அமைதியுடன் நோக்கி, அமைதியோடு விடாப்பிடியாக அவற்றை நீக்குமாறு இறைவனது உதவியை நாடவேண்டும், மனங்கலங்கவோ, வேதனைப்படவோ அதைரியப்படவோ கூடாது.

நீயாகவே செய்ய முடியாததை அன்னையின் சக்தியை உதவிக்கு அழைப்பதன் மூலம் செய்து முடிக்கலாம். அந்த உதவியைப் பெற்று அதை உன்னுள் வேலை செய்ய விடுவதே சாதனையில் வெற்றி பெறுவதற்கு உண்மையான வழிமுறையாகும்.

இன்னும் மிகுதியாக இருக்கக்கூடிய கஷ்டங்களும் வெல்லப்படும் என்று உறுதியாக நம்பு. புறஜீவன் அஞ்சி நடுங்கத் தேவையில்லை - அன்னையின் சக்தியும் உன்னுள் உள்ள பக்தியும் வழியில் குறுக்கிடும் தடைகளையெல்லாம் வெல்லப் போதுமானவை ஆகும்.

நீ துக்கத்திற்கோ, மனமுடைந்து போவதற்கோ இடங்கொடுக்கக்கூடாது - அதற்கு நியாயமே இல்லை. அன்னையின் அருள் ஒரு கணங்கூட உன்னிடமிருந்து நீக்கப்படவில்லை.

(எங்கள்) பாதுகாப்பு உணக்கு உண்டு, இனி நீ அஞ்சவோ துக்கப்படவோ தேவையில்லை, இறைவன் மீது நம்பிக்கை வை, இவற்றையெல்லாம் கடந்துபோன ஒரு தீக்கனவைப்போல் உதறிவிடு. எங்களுடைய அன்பும் அருளும் உனக்கு உண்டு என்பதை நம்பு.

உன்னுடைய சொந்த மனத்தின், இச்சா சக்தியின் செயலிலேயே நீ எப்பொழுதும் அதிக நம்பிக்கை வைத்து வந்திருக்கிறாய், அதனால்தான் உன்னால் முன்னேற முடியவில்லை. அமைதியாக அன்னையின் ஆற்றலில் நம்பிக்கை வைக்கும் பழக்கத்தை நீ பெற்றுவிடு.


எந்த அளவிற்கு ஒருவன் அன்னையின் செயலுக்குத் திறந்திருக்கிறானே அந்த அளவிற்குக் கஷ்டங்களுக்கு எளிதாகத் தீர்வு காணப்படும், சரியான காரியம் செய்யப்படும்.

என்னுடைய நோக்கம் நீ அமைதியாக இருந்தால் அன்னையின் சக்தி உன்னுள் வேலை செய்து நல்லதொரு தொடக்கத்தையும், ஆரம்ப அனுபவத் தொடரையும் உண்டாக்கி வைக்கலாம் என்பதே.

சைத்திய புருஷன் திறந்து முன்நின்றால் தெய்வ வழிகாட்டுதல் சிறப்பாக வேலை செய்யும்.


திரும்பத்திரும்ப வரும் கஷ்டங்களை எதிர்கொள்ளும் வழி!

திரும்பத்திரும்ப வரும் கஷ்டங்களை எதிர்கொள்ளும் வழி என்ன?

சமதை, விலக்கல், அன்னையின் சக்தியின் உதவிக்கு அழைத்தல்.

அன்னையிடம் பூரண நம்பிக்கை வைத்து, (புறமனம் இன்னும் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்தபோதிலும்) உள்மனத்தை அமைதியுறச் செய்து, அதில் அன்னையின் சாந்தியும் சக்தியும் வரும்படி அழைக்க வேண்டும்.

அன்னையின் சக்தி எப்பொழுதும் உனக்குமேலே இருந்துகொண்டேயிருக்கிறது, அதை ஆதாரத்தினுள் வரும்படி அழைக்க வேண்டும். சக்தி அங்கே வந்ததும் உணர்வோடு உன்னை அதற்குத் திறந்துவைத்து உனது முழுச் சம்மதத்துடன் அதைத் தொடர்ந்து வேலை செய்ய விடவேண்டும். உன்னுடைய தொடர்ந்த சம்மதத்தின் ஆதரவுடனும், அந்த சக்திக்கு எதிரான எல்லாவற்றையும் விலக்குவதன் மூலமும் அதைத் தொடர்ந்து வேலை செய்ய விடு.

இறுதியில் உள்ஜீவன் முழுவதும் அமைதியடைந்து அன்னையின் சக்தி, சாந்தி, உவகை, சாநித்தியம் இவற்றால் ஜீவன் நிரம்பும், அதன்மேல் புறஜீவனும் உள் ஜீவனைப் பின்பற்றிச் செல்லும்.

பகைச் சக்திகளின் செயல் காரணமாகத் துன்பப்படுவதைத் தவிர்க்க சாதகர்களுக்குள்ள மிகச் சிறந்த சாதனம் என்ன?

அன்னை மீது நம்பிக்கையும் முழுச் சரணாகதியும்.

அன்னைக்கு மட்டும் திறந்து மற்றெல்லா சக்திகளையும் எல்லாச் சமயங்களிலும் முற்றிலுமாக விலக்கிவிடுவதுதான் வழி, அவை அதிகமாகச் செயல்படும் போது அதிகமாக விலக்கவேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :