திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2023 (14:42 IST)

சோலைமலை முருகன் கோயில் சஷ்டி உற்சவம்! – திரளான பக்தர்கள் தரிசனம்!

Pazhamuthirsolai
மதுரை மாவட்டம், அழகர்கோவில் மலையில் முருகப் பெருமானின் - ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது.


 
இங்கு ஆண்டுதோறும், ஐப்பசி மாதம் நடை பெறும்  கந்த சஷ்டி பெருந்திரு விழாவும் ஒன்றாகும்.

இந்த  முக்கிய சஷ்டி திருவிழா முதல்நாளாக  நேற்று 13ம் தேதி திங்கட் கிழமை காலையில் உற்சவர் சுவாமி, மூலவர் சுவாமிக்கும் காப்பு கட்டுதலுடன் தொடங்கி ,பக்தர்கள் வரிசையாக சென்று காப்பு கட்டி
விரதத்தை தொடங்கினார்கள்.

இன்று காலையில் சஷ்டி மண்டப வளாகத்தில ஷண்மு கார்ச்சனை  மஹா அபிஷேகம் நடந்தது.

இதனை தொடர்ந்து, உற்சவர் வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, குடம், குடமாக, பால், சந்தனம் விபூதி, தீர்த்தம், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், சர விளக்கு தீபாராதனைகள், சிவாச்சார்யார்களின் வேத மந்திரங்களுடன் நடந்தது.

மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன்  அன்ன வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள்குவிந்து விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று விடுமுறை நாள் என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. அதிகளவில் வாகனங்கள் வந்திருந்ததால் போக்குவரத்து தடை ஏற்பட்டு பின்னர் சரியானது. இதனால், பக்தர்கள் சிரமப்பட்டனர்.

தொடர்ந்து, 14ம் தேதி இன்று காலையில் வழக்கம் போல் பூஜைகள் , பின்னர் 11 மணிக்கு காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 15ம் தேதி நாளை 3ம் திருநாள் அன்று யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 16ம் தேதி 4ம் திருநாள். அன்று திருவிழாவில் ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், 17 ம் தேதி சப்பர வாகனத்திலும், மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹார விழா வரும் 18ம் தேதி சனிக்கிழமை நடக்கிறது' இதில், குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, மாலையில் 4.15 மணிக்கு வேல் வாங்குதல் , தொடர்ந்து வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி, அன்று மாலை 4.30 மணிக்கு திருக்கோவிலின் ஈசான திக்கில் கஜமுகா சூரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகா சூரனையும் ,  ஸ்தல விருட்சமான நாவல் மரத்தடியில் மாலை 5.30 மணிக்கு.பத்மா சூரனையும் சம்ஹாரம் செய்யும்  சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும்.இதனை தொடர்ந்து 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், பல்லக்கு வாகனத்தில் சுவாமி புறப்பாடும், அன்று மாலை 5மணிக்கு ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் இந்த கந்த சஷ்டி பெரும்  திருவிழா நிறைவு பெறுகிறது. 

கந்த சஷ்டி திருவிழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், கோவில் துணை ஆணையர் ராமசாமி, அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், ரவிக்குமார், மீனாட்சி, மற்றும் திருக்கோவில் அலுவலர்கள், உள்துறை , பணியாளர்கள் செய்திருந்தனர்.