மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!
தமிழக அரசு மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கி வரும் நிலையில், அதேபோல் விவசாயிகளுக்கும் மாதம் ரூ.3,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயம் மற்றும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் மார்ச் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கான தயாரிப்பில் வேளாண்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு விவசாயிகளிடம் கருத்து கேட்டபோது, விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, விவசாயிகள் நலனை பேணும் வகையில் இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வர வேண்டும். மேலும், விவசாயி வேலையைச் செய்யும் போது உயிரிழந்தால் ரூ.25 லட்சம் வழங்கும் சிறப்பு திட்டம் அமல்படுத்த வேண்டும். இத்துடன், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என்பதும் அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இந்த கோரிக்கைகளில் எவைஎவை பட்ஜெட்டில் இடம்பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க வேண்டும்.
Edited by Mahendran