சாலை விபத்தில் படுகாயம் .. தலையில் கட்டுடன் தேர்வு எழுத வந்த பிளஸ் 2 மாணவி..!
சாலை விபத்தில் சிக்கிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தலையில் கட்டுடன் தேர்வு எழுத வந்த சம்பவம் நாமக்கல் அருகே நடந்துள்ளது.
நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டி என்ற பகுதியை சேர்ந்த கார்த்திகா ஸ்ரீ அங்குள்ள காமராஜ் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்த நிலையில், முதல் நாள் தேர்வு எழுதுவதற்காக அவர் பள்ளிக்கு சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். எதிர்பாராத விதமாக, அவர் சாலை விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்தில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பிறகு, தலையில் கட்டு போட்டுக்கொண்டு காலை 9:45 மணிக்கு தேர்வு எழுத வந்தார். அங்கிருந்த கல்வி அதிகாரிகள் அவரை அழைத்து, தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர்.
இதையடுத்து, செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் உமா, விபத்தில் சிக்கிய மாணவியை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தேர்வை தைரியமாக எழுதுமாறு ஊக்கப்படுத்தினார். அந்த மாணவிக்கு தேவையான அனைத்து உதவிகளும் அருகில் இருந்து செய்ய வேண்டும் என கண்காணிப்பாளருக்கு அவர் அறிவுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran