புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 15 அக்டோபர் 2024 (09:14 IST)

தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட பயணவழி உணவகங்களில் சோதனை: போக்குவரத்துத் துறை

தமிழ்நாடு முழுவதும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 54 பயணவழி உணவகங்களின் தரம் மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசின் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயணவழி உணவகங்களில் போக்குவரத்து கழகங்களின் குழு அவ்வப்போது திடீர் ஆய்வுகள் நடத்தி வருகிறது.

அரசு பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு முழுவதும் சுமார் 54 பயணவழி உணவகங்கள் அங்கீகரிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இவ்வுணவகங்களில் உணவின் தரம், சுவை, கூடுதல் உணவுக் கட்டணம் மற்றும் கழிவறை அசுத்த நிலை போன்றவை மீது, பயணிகளிடம் இருந்து பெறப்படும் புகார்களின் அடிப்படையில் மேற்கண்ட குறைகளை களைந்து பயணிகளின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் போக்குவரத்துக் கழகங்களின் குழு அவ்வப்போது திடீர் ஆய்வு செய்து வருகிறது.

கடந்த செப்டம்பர் 2024 மாதம், மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் மேற்கூறிய புகார்கள் கண்டறியப்பட்ட ஆறு உணவகங்களில், அரசு பேருந்துகளை நிறுத்துவது தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட நடவடிக்கைகளால் பயணிகள் திருப்தி அடைவதுடன், சுத்தமான சுவையான கூடுதல் கட்டணம் இல்லாத உணவு வழங்கவும் சுகாதாரமான நிலையில் கழிவறைகளை பராமரித்து பயணிகளின் எதிர்பார்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து உணவகங்களின் செயல்பாடுகளையும் வருகின்ற காலங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பயண வழி உணவங்களின் தரத்தினை அனைத்து அம்சங்களிலும் உறுதி செய்ய அரசு போக்குவரத்துக் கழகங்கள் தேவையான முன் முயற்சிகளை எடுத்து வருகிறது.


Edited by Siva