1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 6 டிசம்பர் 2024 (13:05 IST)

அதானிக்கு ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தத்தை வழங்கக்கூடாது: அன்புமணி கடும் எதிர்ப்பு..!

meter
அதானிக்கு ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், அதானிக்கு ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தம் வழங்க கூடாது என பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தத்தை அதானி குழும நிறுவனத்திற்கு தமிழ்நாடு மின்வாரியம் வழங்கக் கூடும் என்று வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
 
ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட காலத்திற்கும் இன்றைக்கும் இடையிலான சூழல்கள் மிகப்பெரிய அளவில் மாறியிருக்கும் நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் குறிப்பிடப்பட்ட விலையில் ஸ்மார்ட் மீட்டர்களை வாங்கக்கூடாது.
 
அதானி குழும நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டிருப்பதால், அதற்கு ஒப்பந்தம் வழங்கப்படலாம் என்பதை மேலோட்டமாகப் பார்க்கும் போது, சரியான முடிவு தானே என்று தோன்றலாம். 
 
ஆனால், ஸ்மார்ட் மீட்டர் குறித்த முழுமையான விவரங்களை நன்றாக அறிந்தவர்களுக்குத் தான் இதன் பின்னணியில் உள்ள குறைகள் தெரியும். ஸ்மார்ட் மீட்டர்கள் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை புதிய தத்துவமாகும்.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதானி குழுமம் ஒரு ஸ்மார்ட் மீட்டருக்கு எவ்வளவு விலை குறிப்பிட்டிருக்கிறது என்பது தொடர்பான விவரங்கள் துல்லியமாக வெளியாகவில்லை.
 
ஸ்மார்ட் மீட்டர்களை பராமரிப்பதற்கான காலம் 7 ஆண்டுகளா அல்லது 10 ஆண்டுகளா? என்பதை தமிழ்நாடு மின்சார வாரியம் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஒருவேளை ஒப்பந்தக்காலம் 7 ஆண்டுகளாக இருந்து, ஒரு மீட்டருக்கு வசூலிக்கப்படவிருக்கும் தொகை ரூ.125 என்று வைத்துக் கொண்டால், தமிழ்நாடு மின்சார வாரியத்தால் முன்பணமாக வழங்கப்பட்ட தொகை இல்லாமல், ஒவ்வொரு மீட்டருக்கும் கூடுதலாக ரூ.10,500 வசூலிக்கப்படும். அதுவே ஒப்பந்தக்காலம் 10 ஆண்டுகளாக இருந்தால், ரூ.15,000 ஆகும். 
 
மாதாந்திர தொகையை குறைப்பது குறித்து அதானி குழுமத்துடன் பேச்சு நடத்தப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி 10 சதவீதம் குறைக்கப்பட்டாலும் கூட, அதானி குழுமத்திற்கு செலுத்தப்படும் தொகை மிகவும் அதிகமாகவே இருக்கும். இதை நேரடியாக நுகர்வோரிடமிருந்து மின் வாரியம் வசூலிக்காவிட்டாலும், கட்டண உயர்வு உள்ளிட்ட மறைமுக வழிகளில் வசூலித்து விடும்.
 
ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தும் திட்டத்தை மின்சார வாரியமே செயல்படுத்துவதில் என்ன சிக்கல்? என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. ஒரு ஸ்மார்ட் மீட்டருக்கு மத்திய அரசின் சார்பில் சராசரியாக ரூ.900 மானியம் வழங்கப்படும் நிலையில், அத்துடன், ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள மீட்டருக்கான கட்டணத்தையும் சேர்த்து கழித்து விட்டால், ஒவ்வொரு ஸ்மார்ட் மீட்டருக்கும் நுகர்வோர் செலுத்த வேண்டிய தொகை ரூ.2000 முதல் ரூ.2500 என்ற அளவில் தான் இருக்கும்.
 
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் ஒரு வகையான சீர்திருத்தம் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், அதையே காரணம் காட்டி, ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தி, பராமரிப்பதில் அதானி போன்ற பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும், அதற்கு தமிழக அரசு துணை போவதையும் அனுமதிக்க முடியாது.
 
எனவே, ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்காக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கோரப்பட்ட அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளையும் மின்வாரியம் ரத்து செய்ய வேண்டும். மின்வாரியமே வெளிப்படையான போட்டி ஏல முறையில் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்து மின் இணைப்புகளுக்கு பொருத்த வேண்டும்.
 
அதற்கு மாறாக, தனியார் பெரு நிறுவனங்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் ஒப்பந்தம் வழங்கப்பட்டால், அதை எதிர்த்து தமிழக மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும். இவ்வாறு அன்புமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
    
 
Edited by Mahendran