ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (08:41 IST)

மகள், பேரன்-பேத்தியுடன் கமிஷனர் அலுவலகம் அருகே தீக்குளிக்க முயன்ற பெண்: சென்னையில் பரபரப்பு

கலெக்டர் அலுவலகம் முன், கமிஷனர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சிப்பது கடுமையான குற்றம் என்றும், இதற்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்றும் சமீபத்தில் எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் சென்னை கமிஷனர் அலுவலகம் அருகே தனது குடும்பத்தினர்களுடன் ஒரு பெண் தீக்குளிக்க முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 
சென்னை திருநின்றவூரை சேர்ந்தவர் மீனா என்பவருக்கு சுசிலா மற்றும்  தனலட்சுமி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் தலா 2 லட்சம் ரூபாய்க்கு மாத சீட்டு கட்டி வந்துள்ளனர். இந்த நிலையில், வெங்கடேசன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்துவிட, அவரது மனைவி லட்சுமி சீட்டு கட்டிய பணத்தை கட்டியவர்களுக்கு திருப்பி தர முடியாமல் சிக்கலில் இருந்துள்ளார்.
 
 
இதுகுறித்து மீனாவின் இரண்டு மகள்கள் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்த மீனா, தனது மகள் மற்றும் ஐந்து வயது பேரன் மற்றும் 3 மாதமே ஆன பேத்தி ஆகியோர்களுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்துள்ளார். அப்போது, வேப்பேரி சிக்னல் சந்திப்பில் திடீரென மகள் மற்றும் பேரன், பேத்தி மீது மீனா மண்ணெண்ணெய் ஊற்றி அனைவரும் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சிப்பதை பார்த்த அந்த சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் ஓடிவந்து அவர்களைக் காப்பாற்றினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்கள் அனைவரையும் வேப்பேரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.