குழந்தைக்கு பால் கொடுத்த தாய் திடீர் மரணம் : போலீசார் திணறல்
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த பெண் திடீரென மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநாகரில் வசிக்கும் வேன் ஓட்டுனர் முத்துராஜ் (25). இவரது மனைவி சத்யா(20). இவர்களுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு மாத கை குழந்தை உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் சத்யா தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென சத்யா மயக்கமடைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த முத்துராஜ் அவரை எழுப்ப முயன்றுள்ளார். ஆனால், எந்த பலனும் இல்லை.
எனவே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சத்யாவை திருவைகுண்டம் அரசு மருத்துவமனையில் முத்துராஜ் சேர்த்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி சத்யா மரணமடைந்தார்.
இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சத்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆகியிருப்பதால் தூத்துக்குடி உதவி ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த போது சத்யா எப்படி மர்மமான முறையில் மரணமடைந்தார்? அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கை குழந்தையை விட்டு சத்யா இறந்து போனது அவர் வசித்து வந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.