நீதிமன்றத்தில் ரூ. 69 கோடியை செலுத்த ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து மீது கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன் என்று இந்திய மாணவர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில், ”கல்விநிலையங்களில் கட்டாய நன்கொடையைத் தடுக்க கொண்டு வரப்பட்ட தடுப்புச் சட்டம் ஏட்டளவில் மட்டுமே உள்ளது. எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ.69 கோடியை திரும்ப அளிக்க பச்சமுத்து தரப்பு முன்வந்துள்ளது.
மருத்துவ சேர்க்கையில் முறைகேடு நடந்து, நீதிமன்ற நடவடிக்கைக்கு ஆளாகிய பிறகும்கூட, தற்போது வரையிலும் இதுபற்றி முதல்வர் ஜெயலலிதா மவுனமாகவே உள்ளார். கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான எல்லா முகாந்திரமும் இருந்தபோதும் கூட, அரசு நிர்வாகம் அமைதியாகவே உள்ளது. கட்டாய நன்கொடை வசூல் என்பதை பொருளாதார குற்றமாகவும் கருத வேண்டும்.
ஆனால், மருத்துவக் கல்வியில் அதிமுக அரசின் அலட்சியத்தின் காரணமாக விழுப்புரம் எஸ்.வி.எஸ். கல்லூரி, டி.டி. கல்லூரி என மருத்துவக் கல்லூரிகள் கட்டணக் கொள்ளைக்கான களமாகவும் மாணவர்களின் வதை முகாம்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. திருவள்ளூர் டி.டி. கல்லூரி துவங்கி, தற்போது திருநின்றவூரில் சீல் வைக்கப்பட்ட நர்சிங் கல்லூரி வரை தமிழகத்தில் அனுமதியில்லாமலே ஆயிரக்கணக்கான மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இவை அனைத்திலும் கட்டணக் கொள்ளை நடந்து வருகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் விதிமுறைகளையோ, தரவரிசையையோ எதையும் பின்பற்றாமல் பண வரிசையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மாணவர்களிடம் கொள்ளையடித்து மோசடி செய்யும் தனியார் கல்லூரிகளுக்கு அரசு நிர்வாகமே துணை போவதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
நீதிமன்றத்தில் வழக்கு வந்தபிறகும் கூட எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம் மீது கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குவது, அரசின் அனுமதியோடு தான் கட்டணக்கொள்ளை நடக்கிறதோ என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, மாணவர்களின் நலனை காத்திடவும், மாணவர்களுக்கு எழுந்துள்ள அச்சத்தைப் போக்கிடும் வகையிலும், தமிழக அரசு உடனடியாக எஸ்.ஆர்.எம். குழுமத்தின் அனைத்துக் கல்லூரிகளிலும் ஆய்வு நடத்தி, கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழகத்தின் இதர மருத்துவம், பொறியியல் கல்லூரிகளிலும் நடைபெறும் கட்டணக் கொள்ளைகளை தடுக்க அரசு வலுவாக தலையிட வேண்டும்.அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் தனியார் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்றிட வேண்டும்.
கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழக அரசின் மெத்தனப் போக்கு நீடிக்குமென்றால், அதற்கு எதிரான வலுவான போராட்டத்தை தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்திய மாணவர் சங்கம் நடத்தும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.