திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2017 (18:11 IST)

சின்னம்மாவா அது யார்?: சட்டசபையில் ஒரே சிரிப்பு!

சின்னம்மாவா அது யார்?: சட்டசபையில் ஒரே சிரிப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அந்த கட்சியினர் சின்னம்மா என அழைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழக சட்டசபையில் சசிகலாவை சின்னம்மா என அதிமுக எம்எல்ஏக்கள் அழைத்ததற்கு சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் ஆட்சேபம் தெரிவித்தார்.


 
 
இன்று சட்டசபையில் குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரன் பேசுகையில் எங்களை வழி நடத்தும் சின்னம்மாவை வணங்கி நான் பேசுகிறேன் என்றார். அப்போது சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் இங்கு ஒரு உறுப்பினர் சின்னம்மாவுக்கு வணக்கம் என்கிறாரே அது யார்? என்றார்.
 
துரைமுருகன் பேச்சுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தனர். ஆனால் திமுக எம்எல்ஏக்கள் சிரிக்கத் தொடங்கினார்கள். இதனையடுத்து சபாநாயகர் தனபால் குறுகிட்டு விளக்கமளித்தார்.
 
சபாநாயகர் தனபால் கூறியதாவது, அவர் அவரது கட்சி பொதுச்செயலாளரை குறிப்பிட்டு சொல்கிறார். அது பற்றி நீங்கள் எதுவும் கூறக்கூடாது. உங்கள் கட்சி தலைவர் பெயரை நீங்கள் எப்படி கூறுகிறீர்களோ அதே போல் அவரது கட்சி பொதுச்செயலாளர் பெயரை அவர் கூறுகிறார். இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.
 
உங்கள் கட்சி தலைவரை பற்றி சொல்ல உங்களுக்கு எப்படி உரிமை இருக்கிறதோ. அதுபோல் அவரது கட்சி பொதுச்செயலாளரை பற்றி சொல்ல அவருக்கு உரிமை உள்ளது. இது குறித்து மேற்கொண்டு விவாதம் கிடையாது என்றார்.