புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (08:18 IST)

உதயநிதி பதவியேற்பு விழா எப்போது? திமுகவினர் அளித்த தகவல்

உதயநிதிக்கு திமுக இளைஞரணியின் மாநில செயலாளர் பதவி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த பதவியில் இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் இந்த பதவிக்கு உதயநிதியின் பெயர் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது
 
இந்த நிலையில் உதயநிதியின் பதவியேற்பு விழாவை தள்ளி வைக்கும்படி மு.க.ஸ்டாலினுக்கு திமுக மூத்த தலைவர்கள் சிலர் ஆலோசனை கூறியுள்ளார்களாம். கருணாநிதி இறந்து ஓராண்டுகூட நிறைவடைய வில்லை என்றும் அதனால் கட்சியின் சுபநிகழ்ச்சிகள் எதுவும் இப்போது வேண்டாம் என்றும் மூத்த தலைவர்கள் கூறியுள்ளதால் உதயநிதியின் பட்டாபிஷேகம் தள்ளிப்போயுள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி உதயநிதியின் ஜாதகப்படி அவருக்கு இப்போது நேரம் சரியில்லையாம். ஒரு மாதம் கழித்து பதவியேற்பு விழா நடத்துவதுதான் நல்லது என்று ஜோசியர்கள் கூறியுள்ளார்களாம்
 
இருப்பினும் வரும் ஜூலை மாதத்துக்குள் உதயநிதியின் பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது. பதவியேற்றவுடன் உதயநிதி தான் திமுகவின் பிரச்சார பீரங்கியாகவும், முக்கிய முடிவுகளை எடுப்பவராகவும் இருப்பார் என தெரிகிறது. அதே நேரத்தில் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி தரவிருப்பதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. ஆனால் இது வெறும் வதந்தி தான் என்றும் சபரீசனே எம்பி பதவியை விரும்பவில்லை என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன