வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 26 மார்ச் 2021 (00:36 IST)

உங்ககிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கலாம்? மாணவியின் கேள்விகளுக்கு பதில் கொடுத்த குஷ்பு... வைரல் வீடியோ!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பாஜக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஒரே பெயர் குஷ்பு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் இணைந்த குஷ்புவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எனவே வர உள்ள சட்டமன்ற தேர்தலிலேயே குஷ்புவிற்கு பாஜக தலைமை வாய்ப்புக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போலவே அமித் ஷா வரை சென்று ஒப்புதல் பெறப்பட்ட பாஜக தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டியிடுவது உறுதியானது. 
 
இதையடுத்து மார்ச் 18ம் தேதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த குஷ்பு, அன்றிலிருந்தே ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரையும் தன்னுடைய  கனிவான பேச்சால் கவர்ந்த குஷ்புவிற்கு அப்பகுதி மக்களும் ஆராத்தி எடுத்து வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். தினந்தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் குஷ்புவிற்கு ஆதரவாக அவருடைய கணவர் சுந்தர் சியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். 
 
வீடு, வீடாக சென்று அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறியும் குஷ்பு, அதனை எல்லாம் தொகுத்து ஆயிரம் விளக்கு பகுதி மக்களுக்காகவே பிரத்யேக வாக்குறுதிகளையும், திட்டங்களையும் வெளியிட்டுள்ளார். ஏழை குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தையின் பெயரில் ரூ.1 லட்சம் டெபாசிட், பணிக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு, மகளிர் சுய தொழில் தொடங்க முத்ரா கடன் ஏற்பாடு, இஸ்லாமிய பெண்கள் வீட்டிலிருந்த படியே தொழில் செய்து முன்னேற நடவடிக்கை, 8-ம் வகுப்பு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக டேப்லெட் உள்ளிட்ட பெண்கள், மாணவர்களை கவரும் படியான பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். 
 
குஷ்புவின் இந்த தேர்தல் அறிக்கைக்கு அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெண்களுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ள குஷ்பு வாக்கு சேகரிக்க செல்லும்  போது இஸ்லாமிய பெண்கள் ஆரத்தழுவி வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது வாக்கு கேட்க வந்த குஷ்புவிடம், சிறுமி ஒருவர் ஆங்கிலத்தில் அடுக்கடுக்காய் கேள்வி கேட்க, அதற்கு குஷ்புவும் சிறிதும் தயங்காமல் பளீச்சென பதிலளிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 
அந்த வீடியோவில், ‘இந்த ஏரியாவிற்கு என என்ன மாதிரியான வாக்குறுதிகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம். தேர்தல் நேரத்தில் மட்டுமே எல்லாருக்கும் இந்த தொகுதி தெரிகிறது. அதன் பிறகு ஆயிரம் விளக்கு தொகுதியா? அது எங்க இருக்கு என கேட்கிறார்கள். எனவே இந்த ஏரியாவிற்காக நீங்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை சொல்லுங்கள் என கேள்வி எழுப்பினர். சிறுமி பேசுவதை சிரித்த முகத்துடன் கேட்டுக்கொண்டிருந்த குஷ்பு, ‘என்னுடைய குழந்தைகள் இங்குள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் தான் படிக்கிறார்கள். இந்த ஏரியாவில் சுனாமி, வெள்ளம் போன்ற பாதிப்புகள் வந்த போது உதவிகள் செய்துள்ளேன். எங்க அம்மா சொல்லிக்கொடுத்திருக்காங்க வலது கை கொடுக்குறது, இடது கைக்கு தெரியக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. அதனால் நான் எதையுமே பப்ளிசிட்டி செய்தது கிடையாது. சென்னை வெள்ளத்தின் போது இந்த பகுதியில்உள்ள அனைவருக்கும்   21 நாட்கள் உணவு கொடுத்துள்ளோம். அதை எல்லாம் நான் வெளியில் தெரியாமல் அமைதியாக செய்தேன். நான் இந்த முறை தான் முதன் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன்.  நான் உறுதியளிக்கிறேன்,  மற்ற அரசியல்வாதிகளைப் போல் தேர்தல் நேரத்தில் மட்டுமே வந்து செல்லமாட்டேன். உங்களுக்கு என்னிடம் கேள்வி கேட்க அனைத்து உரிமையும் உள்ளது எனக்கூறி சிறுமியை பாராட்டினார். இந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.