இன்றிரவும் இடி மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!
சென்னை உள்பட தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று இரவும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினந்தோறும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்று இரவு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக கடலோர பகுதிகளிலும், டெல்டா மாவட்டங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரி பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபி கடல் பகுதியில் மீனவர்களுக்கு எந்த விதமான எச்சரிக்கையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva