வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 28 ஜூலை 2024 (14:01 IST)

மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு.! 12000 கன அடி நீர் திறக்க முதல்வர் உத்தரவு..!!

Mettur Dam CM
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள கேஆர்எஸ், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 65ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டமும் கிடு, கிடுவென உயர்ந்து நேற்று 100 அடியை எட்டியது. கடந்த 15 தினங்களுக்கு முன்பு 45 அடியாக இருந்த மேட்டூர் அணை தற்போது 107 அடியை கடந்துள்ளது
 
இந்தநிலையில் மேட்டூர் அணையை திறக்கும் தேதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.   சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக டெல்டா மாவட்ட மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு குறித்து முடிவெடுக்கப்பட்டது. 
 
அதன்படி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று பிற்பகல் மூன்று மணிக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதற்கட்டமாக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.


மேலும் நீர் வரத்தை பொறுத்து மேட்டூர் அணையில் இருந்து படிப்படியாக நீர் திறப்பை அதிகரிக்க வேண்டுமென்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.