1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vishal talk about dhanush political entry

தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? முதலில் வாழ்த்து... விஷால் சொன்ன அந்த ஒரு விஷயம்

dhanush
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். கடந்த 2002-ம் ஆண்டு வெளியான  துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷ், தனது வித்தியாசமான நடிப்பு மற்றும் கதைத்தேர்வுகளால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கினார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என திரைத்துறையின் பல்வேறு தளங்களிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
 
கிட்டத்தட்ட 50 படங்களை கடந்துள்ள தனுஷ், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், கர்ணன, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படங்களாக அமைந்துள்ளன. குறிப்பாக  ஆடுகளம்  மற்றும்  அசுரன் படங்களுக்காக தேசிய விருதையும் வென்று தனது நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்.
 
இந்நிலையில், சமீபகாலமாக தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் அதிகரித்து வருகின்றன. நடிகர் விஜய் அரசியல் களத்தில் இறங்கியுள்ள நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்களுக்கும் அரசியல் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
அந்த வகையில் தனுஷின் சமீபத்திய செயல்பாடுகளும் அவர் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவதற்கான முன்னேற்பாடுகளாக இருக்கலாம் என்ற பேச்சை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பான அவரது நடவடிக்கைகள், அவரது அரசியல் திட்டம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
 
எனினும், தனுஷ் இதுவரை தனது அரசியல் வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருந்தபோதிலும், அவரது சமீபத்திய செயல்பாடுகளை வைத்து அவர் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பேச்சு நிலவி வருகிறது.
 
இந்த சூழலில், நடிகர் விஷாலிடம் தனுஷின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷால்,  தனுஷ் அரசியலுக்கு வர உள்ளதாக நிறைய பேச்சுக்கள் வந்து கொண்டிருக்கிறது. அப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருந்தால் முதலில் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்  என்று கூறினார்.
 
மேலும்,  மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் சேவை என்பது சாதாரண விஷயம் கிடையாது. பச்சை மையில் கையெழுத்து போட்டு மக்களுக்காக அதிகமாக நல்லது செய்ய முடியும். தனுஷ் ஒரு சிறந்த நடிகர். சிறந்த இயக்குநர். இப்படிப்பட்ட ஒருவர் அரசியலுக்கு சென்றால் தமிழ் சினிமா மேலும் ஒரு சிறந்த நடிகரை இழக்கும்  என்றும் தெரிவித்துள்ளார்.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
டிரம்ப்பின் பதவிக்காலம் வரை ஹார்மூஸை திறக்கமாட்டோம்!... ஈரான் அறிவிப்பு!..