1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 10 ஜனவரி 2018 (12:31 IST)

பட்டிமன்றத்தில் அணி தலைவராக விஜயகாந்த் - தெறிக்க விடுவாரா?

தேமுதிக சார்பில் நடைபெறவுள்ள பட்டிமன்றத்தில் ஒரு அணியின் தலைவராக விஜயகாந்த் களம் இறங்கவுள்ளார்.

 
சினிமாவிலும், அரசியலிலும் வசனங்களுக்கு பெயர் போனவர் விஜயகாந்த்.  அவர் பேசும் வசனங்களில் சமூக பிரச்சனைகளும், தற்காலிக அரசியலும் அனல் பறக்கும். அதேபோல், அவர் அரசியலுக்கு வந்த பின்பும் கூட்டத்திலும், பிரச்சார மேடைகளிலும், செய்தியாளர் சந்திப்புகளிலும் அவர் பேசும் வசனங்கள் வைரலாக இணையத்தில் இப்போது கூட வலம் வருகிறது.
 
அந்நிலையில், சமீப காலமாக உடல் நலக்குறைபாடு காரணமாக பேசுவதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. இதற்காக, சிங்கப்பூர் சென்று அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். தற்போது தீவிர அரசியலில் ஈடுபடமால் ஒதுங்கி இருக்கிறார். 
 
இந்நிலையில், அரசியலுக்கு வரப்போவதாக நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அறிவித்துள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கூட நடிகர் விஷால் போட்டியிட முயன்று தன் அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அதேபோல், நடிகர் பாக்கியராஜ் கூட விரைவில் அதிமுகவில் களம் இறங்குவதாக அறிவித்துள்ளார். இப்படி சினிமாத்துறையிலிருந்து பலரும் அரசியலுக்கு களம் இறங்குவதை அடுத்து, தனது இருப்பைக் காட்டிக் கொள்ளும் நிர்பந்தம் விஜயகாந்திற்கு ஏற்பட்டுள்ளது.
 
எனவே, தேமுதிக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், சென்னை வேளச்சேரியில் வருகிற 11ம் தேதி தேமுதிக சார்பில் “விஜயகாந்தின் புகழுக்கு காரணம் அரசியல் பணியா? அல்லது கலைப்பணியா?” என தலைப்பில் ஒரு பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.  இதில், அரசியல் பணியே காரணம் என்ற அணிக்கு  விஜயகாந்த் தலைவராகவும், கலைப்பணியே காரணம் என்ற அணிக்கு பிரேமலதாவும் தலைமையேற்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டிமன்றத்திற்கு கவிஞர் பிறைசூடன் நடுவராக செயல்படுகிறார்.
 
இந்த பட்டிமன்றத்தில் தனது பேச்சால் விஜயகாந்த் தெறிக்க விடுவார் என தேமுதிகவினரும், அவரது ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.