1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2023 (12:30 IST)

அள்ளித் தந்த வள்ளல்; நரிக்குறவ மக்கள் வீடு கட்ட 7 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்த விஜயகாந்த்!

Vijayakanth
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்த நிலையில் அவர் வீடு கட்டுவதற்காக நிலம் தானமாக தந்ததை நரிக்குறவ இன மக்கள் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளனர்.



பிரபல தமிழ் சினிமா நடிகரும், தேமுதிக தலைவருமான, ரசிகர்களாலும் தொண்டர்களாலும் ‘கேப்டன்’ என உரிமையோடு அழைக்கப்படும் விஜயகாந்த் நேற்று மறைந்தார். அவரது திருவுடல் இன்று சென்னை தீவுத்திடலில் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

சினிமா துறையிலும் சரி, அரசியலிலும் சரி அப்பழுக்கற்றவராக திகழ்ந்தவர் விஜயகாந்த். அவர் குறித்து பேசும் அனைவரும் அவர் பசியில் மக்கள் வாடக்கூடாது என தொடர்ந்து அன்னதானம் செய்ததை குறிப்பிட்டு கூறுவார்கள். ஆனால் கேப்டன் விஜயகாந்த் அதையும் தாண்டி பல அரும்பெரும் உதவிகளை சாதி, மதம் கடந்து பல மக்களுக்கும் செய்துள்ளார்.

திருப்பரங்குன்றம் ஆலங்குளத்தில் விஜயகாந்தின் தந்தை அழகர்சாமிக்கு சொந்தமாக 7 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தை விஜயகாந்தின் எதிர்காலத்திற்காக அழகர்சாமி வைத்திருந்தார். பின்னர் திரைத்துறையில் நுழைந்து பெரும் இடத்தை அடைந்த விஜயகாந்த் அந்த நிலத்தை நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என நினைத்தார்.

அதன்படி தான் அந்த நிலத்தை நேரடியாக வழங்காமல் கடந்த 1998ம் ஆண்டில் கலெக்டரிடம் 7 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்து, அவர் மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் நரிக்குறவ இன மக்களுக்கு அந்த நிலத்தில் வீடுக்கட்டி கொண்டு பயன்பெற செய்தார். கேப்டன் விஜயகாந்த் அளித்த நிலத்தால் பயன்பெற்ற அந்த மக்கள் அவர் மறைந்த இந்த சமயத்தில் இதை நினைவுக்கூர்ந்து ’அவர் எங்களுக்கு வாழ்க்கை கொடுத்த கடவுள்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

Edit by Prasanth.K