1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2023 (09:49 IST)

கஷ்டப்பட்டு காசு சேத்து கட்டுனா மண்டபம்.. கடைசியில இதுதான் மிச்சம்! – வேதனையோடு பேசிய விஜயகாந்த்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்த நிலையில் அவர் குறித்த ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் ஒன்று அவரது திருமண மண்டபம் இடிக்கப்பட்டபோது அவர் மனம் கலங்கி பேசியது..



தேமுதிக கட்சியின் தலைவராகவும், நடிகராகவும் இருந்த விஜயகாந்த் மக்களிடையே நல்ல மனிதர் என்றும் அறியப்பட்டவர். யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதையும், எல்லாருக்கும் சரிசமமான உணவு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தனது வீட்டில் தொடங்கி படப்பிடிப்பு தளம் வரை தவறாது பின்பற்றியவர்.

ஏழை எளிய மக்கள் பசியாற வேண்டும் என்பதற்காக கோயம்பேட்டில் இருந்த தனது திருமண மண்டபத்தில் அன்னதானமும் செய்து வந்தவர் விஜயகாந்த். ஆனால் அந்த மண்டபம் திமுக ஆட்சியில் கோயம்பேடு பாலம் கட்டும் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்டு இடிக்கப்பட்டது.

அப்போது ஒரு நேர்க்காணலில் வேதனையோடு பேசிய விஜயகாந்த் "நேத்து மண்டபத்தைப் போய்ப் பார்த்தேன் சார்.இடிஞ்சுகிடக்கிற மண்டபத்தைப் பார்த்தா,குடல் அறுந்து தொங்குற மாதிரி இருக்கு.

வேர்வை சிந்திச் சேர்த்த காசு. சில பேரு மாதிரி ஊரை அடிச்சு, உலையில் போட்டுச் சம்பாதிச்சதில்ல. ஊழல் பண்ணிச் சேர்க்கலை. கடன்பட்டு, கஷ்டப்பட்டுக் கட்டி முடிச்ச மண்டபம்.  அது இன்னிக்குக் கண்ணெதிரே நொறுங்கும்போது மனசில் சுருக்குனு ஒரு வலி. அவ்வளவுதான்..!" என கூறியுள்ளார்.

பல ஏழை மக்களுக்கு உணவளிக்க விஜயகாந்த் கட்டிய அந்த மண்டபம் அன்று இடிக்கப்பட்டது. அது இடிக்கப்பட்டு கட்டப்பட்ட பாலத்தின் மீது நின்றுதான் நேற்று மொத்த மக்களும் அவரது கட்சி அலுவலகத்தில் இருந்த அவரது திருவுடலை பார்க்க முயன்று கொண்டிருந்தார்கள்.

Edit by Prasanth.K