செப். 30ம் தேதிக்குள் ஆட்சி கவிழும் - மீண்டும் விஜயகாந்த்
எடப்பாடி பழனிச்சாமி அரசு விரைவில் கவிழும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
தினகரனையும், சசிகலாவையும் ஒதுக்கிவிட்டு ஓ.பி.எஸ் அணியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்றிணைந்துள்ளது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை ஆளுநரை சந்தித்த 19 எம்.எல்.ஏக்கள், எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசியல் சூழ்நிலைபற்றி ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார். அதில் “எடப்பாடியும், பழனிசாமியும் மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்த ஆட்சி வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள் கவிழும். திமுக தலைவர் கருணாநிதி தற்போது இருந்திருந்தால் சரியாக காய் நகர்த்தியிருப்பார். இந்த ஆட்சி கவிழ்ந்திருக்கும்.
தமிழக அரசியலில் ஜெயலலிதா இல்லாததால் வெற்றிடம் ஒன்றும் உருவாகவில்லை. விஜயகாந்தை இல்லாமல் போனால்தான் வெற்றிடம் ஏற்படும். வெற்றிடத்தை நிரப்புவோம் என மற்றவர்கள் கூறுவது என்னுடைய இடத்தைத்தான். வரும் சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம். யாருடன் கூட்டணி அமைக்க மாட்டோம். இது உறுதி” என அவர் பேசியுள்ளார்.