வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 19 மே 2020 (08:30 IST)

எண்ணிக்கையைக் குறைக்க சோதனை குறைக்கப்பட்டுள்ளது! ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு விஜயபாஸ்கர் பதில்!

தமிழகத்தில் கொரோனா சோதனை எண்ணிக்கைக் குறைக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,700 ஐ தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 81 ஆக உள்ளது. கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் தினமும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 700 க்கு மேல் இருந்த நிலையில் சில தினங்களாக மட்டும் எண்ணிக்கை 400 முதல் 500 வரை இருந்தது. இதனால் பாதிப்புக் குறைந்துள்ளதாக மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்ட நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் எண்ணிக்கயைக் குறைத்துக் காட்டுவதற்காக சோதனைகளை குறைத்துள்ளனர் எனக் குற்றம் சாட்டினார். இது மக்களுக்கும் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது.

ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு நேற்று பதிலளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ‘தமிழகத்தில் இதுவரை 3,37,841 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாகத் தமிழகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.39 அரசு ஆய்வகங்கள் உட்பட 61 ஆய்வகங்கள் தமிழகத்தில் உள்ளன. 24 மணி நேரமும், அரசின் ஒட்டு மொத்த இயந்திரமும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் உள்ளன.

சோதனைக் குறைக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுவது தவறானது. வெளியூர்களிலிருந்து வருபவர்களைப் பொறுத்து, அன்றைய நிலவரப்படி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு சோதனை எண்ணிக்கை அதிகமாகும். ஒரு நாள் குறையும். கடந்த 10 நாட்களாக எடுக்கப்பட்ட சோதனை எண்ணிக்கை சராசரியாக 12, 536 ஆக இருக்கிறது. ’ எனக் கூறியுள்ளார்.