போஸ்டர் அடி.. அண்ணன் ரெடி! விஜய்யின் அரசியல் பயணம் ஆரம்பம்! - இன்று முக்கிய அறிவிப்பு?
நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி தொடக்கம் குறித்த முக்கியமான அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். கடந்த பல ஆண்டு காலமாக அரசியல் நுழைவிற்காக சரியாக திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார் நடிகர் விஜய். கடந்த காலங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களிலும் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் நின்று பல இளைஞர்கள் வெற்றி பெற்றது விஜய்யின் அரசியல் வருகையை மேலும் தீவிரப்படுத்தியது.
சமீபத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்த நிலையில் கட்சியை பதிவு செய்ய டெல்லிக்கு நிர்வாகிகள் புறப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது. அதுமுதல் விஜய் கட்சியை எப்போது அறிவிப்பார்? கட்சி பெயர் என்ன? என்பது குறித்த பல்வேறு யூகங்கள் சமூக வலைதளங்களை வைரலாக்கி வருகிறது.
என்றாலும் இதுவரையிலும் விஜய் தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவோ, அரசியலில் கால் வைக்கப்போவதாகவோ நேரடியாக ஒரு இடத்திலும் சொல்லாமலே நற்பணிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் நேரடி அரசியல் வருகை குறித்த முக்கியமான அறிவிப்பு இன்று பிற்பகல் 3 மணி அளவில் வெளியாகலாம் என விஜய் மக்கள் இயக்கம் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சுகள் நிலவி வருகிறது.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் #VijayMakkalIyakkam #தலைவர்விஜய் உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் வேகமாக ட்ரெண்டாகி வருகின்றன. நடிகர் விஜய் அவரது அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாகவும் உள்ள நிலையில், இன்று தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் அறிவிப்புகள் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edit by Prasanth.K