திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 27 டிசம்பர் 2023 (11:30 IST)

சில அரசியல் ரகசியங்களை வெளியே சொன்னால்..? – ஓபிஎஸ் சூசகம்!

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜேசிடி பிரபாகர், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

ஜனவரி 19 ம் தேதி  உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு வழக்கு வருகின்றது எனவும், அந்த வழக்கில் பொதுக்குழு தீர்மானம் தொடர்பான முடிவுகள் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

ஈரோட்டில் இரட்டை இலை தற்காலிகமாக தான் கொடுக்கப்பட்டது என தெரிவித்த அவர், அவர்கள் என் மீது என்ன குற்றம் சொல்கின்றனர்? என்னை நீக்குவதற்கு என்ன காரணம் சொல்கின்றனர்? யாருக்கு நான் நம்பிக்கை துரோகம் செய்தேன் என்பதை அவர்களால் சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

இப்பொழுதும் அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்கின்றேன் என தெரிவித்த அவர், ஒன்றுபட்டால்தான் வெற்றி அடையமுடியும், இது  புரிய வேண்டியவர்களுக்கு புரியவேண்டும் எனவும், அவர்கள் இதை காதில் வாங்க மாட்டேன் என்கின்றனர் எனவும் தெரிவித்தார். மக்களின் அபிமானம், தொண்டர்களின் அபிமானத்தை பெற வேண்டும் என சொல்கிறேன், அதை கேட்க மாட்டேன் என்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்துக்ப் கொண்டு செயல்படுவதாக சொல்பவன் முட்டாள் என காட்டமாக தெரிவித்தார். அப்போது இடைமறித்த வைத்திலிங்கம்,  அதிமுக நிர்வாகிகள் மீது எத்தனை வழக்கு இருக்கின்றது,  கொடநாடு கொலை, கொள்ளை உட்பட பல வழக்குகள் இருக்கின்றன, அதில் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும், திமுகவும் அதிமுகவும் இணைந்து செயல்படுகின்றன என்பது பொதுமக்கள் கருத்து என தெரிவித்தார்.

சட்டமன்ற விதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற விதி மட்டும்தான் இருக்கிறது, எதிர் கட்சி துணைத்தலைவர் என்பது இல்லை எனவும், அதை சபாநாயாகர் நினைத்தால் கொடுக்கலாம்,  அவர் வேண்டாம் என்று நினைத்தால் கொடுக்க தேவையில்லை எனவும், அது சபாநாயகரின் தனி அதிகாரம், அது சட்டமன்ற விதிகளில் இல்லை எனவும் தெரிவித்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுடைய நிலைப்பாடு,  கடந்த பத்தாண்டுகளில் பிரதமர மோடி தலைமையிலான அரசு , சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறார்கள், எனவே மீண்டும் பிரதமராக மோடி தான் வர வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் நடந்த தவறுகளை வெளியில் சொன்னால் எடப்பாடிக்கு திஹார் சிறைதான் என மேடையில் பேசியது குறித்த கேள்விக்கு,

அதிமுக ஆட்சியின் போது சில தவறுகள் உள்ளே நடந்தது என தெரிவித்த அவர்,  இப்போது ஆட்சியில் யார் இருக்கின்றனர் எனவும் கேள்வி எழுப்பினார். ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில்  கொடநாடு குற்றவாளிகளை கண்டுபிடிப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது  சொன்னார்கள்,  அதில்  ஆறு கொலைகள் நடந்துள்ளது , ஒன்றும் செய்யவில்லை என தெரிவித்தார். சில அரசியல் ரகசியங்கள் உண்மையில்  இருக்கிறது, அதை வெளியில் சொல்ல முடியுமா? எனவும் தெரிவித்தார்.

அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் அதை நீக்க யாருக்கு அதிகாரம் இருக்கிறது? அந்த சேரில் போய் உட்காரலாமா? என கேள்வி எழுப்பிய ஓ.பி.எஸ், சின்னம்மாவிற்கு பொதுச் செயலாளர் பதவி கொடுக்கும் பொழுது  நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா என்ற  தீர்மானம் எதுவும் போடவில்லை எனவும் விளக்கினார்.

திமுக ஆட்சி குறித்து தினந்தோறும் அறிக்கைகள் கொடுத்து வருகிறேன், புயல், வெள்ளம் வந்தால் அதில் சிறப்பாக செயல்படுவதில்லை, தோற்றுப் போய் இருக்கின்றனர் என்று சொல்லி இருக்கின்றேன் எனவும் தெரிவித்தார். மேலும் அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிச்சாமி இனி மேலே வரவே முடியாது எனவும் தெரிவித்தார்.பாரதிய ஜனதா கட்சியுடன் உறவு சீராக இருக்கிறது எனவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர், புரட்சித் தலைவர் மனைவி ஜானகி அம்மாளுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதில் மாற்று கருத்து இல்லை எனவும்,  அதிமுக தலைமை கழகம் ஜானகி அம்மாவின் சொத்து எனவும் தெரிவித்தார்.

தலைமைக் கழகத்திற்கு எம்ஜிஆர் மாளிகை என்று பெயர் வைக்க வேண்டும் , கீழே இருக்கும் அரங்கத்திற்கு ஜெயலலிதா பெயரும், மேலே இருக்கும் அரங்கத்திற்கு ஜானகி அம்மாள் பெயரும் வைக்க வேண்டும் என ஜே சி டி  பிரபாகரன் சொன்ன பொழுது,  எடப்பாடி பழனிச்சாமி வைக்கவில்லை முகத்தை சுளித்தார் எனவும் தெரிவித்தனர்.

எம்ஜிஆர் பெயரை மட்டும் வைத்துவிட்டு ஜெயலலிதா, ஜானகி ஆகியோர்  பெயரை வைக்காமல்  ஏமாற்றிவிட்டு எடப்பாடி இப்பொழுது நாடகமாடுகிறார் எனவும் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு திராவிடம், ஆரியம் என்றால் என்ன என்பது தெரியாது,  திராவிட இயக்கத்தின் வரலாறு தெரியாது,  ஆக்சிடென்டில் பொதுச் செயலாளர் ஆனார் சீக்கிரம் அவுட் ஆகி விடுவார் எனவும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்கும்  அளவிற்கு நாங்கள் தயாராக இல்லை, ஏற்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா தொடக்கத்தில்  ஜானகியம்மாள் புரட்சித்தலைவர் இருக்கிற ஒரு வெங்கல சிலையை நிறுவுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டது எனவும், சிலை தயாராகிக் கொண்டிருக்கிறது,  நூற்றாண்டு விழாவில் ஜானகி அம்மாளுடன் எம்ஜிஆர்  இருக்கும் சிலை வைக்கப்படும் எனவும் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.