நடிகர்களுக்கு அரசியல் கைகொடுக்காது: மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 88வது பிறந்த நாள் விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது.
இவ்விழாவில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது, “தமிழ் சினிமாக்கள் தமிழ் மொழி, கலாச்சாரத்தை தாங்கி பிடித்தது. அரசியலையும் பிடித்தது. சிவாஜியும் அரசியலுக்கு வந்தார். ஆனால், அவரால் அரசியலில் நிலைக்க முடியவில்லை. நடிகர்களுக்கு அரசியல் கைகொடுக்காது என்பதற்கு சிவாஜி நல்ல உதாரணம்.
சிவாஜியின் பரம ரசிகர்களில் நானும் ஒருவன். அவரது வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பார்த்து வியந்திருக்கிறேன். ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட இந்தியாவின் கடைக்கோடி வீரனை உலகம் முழுக்க கொண்டு சென்றவர் அவர். ஒரு புறம் பெரியாரோடும் இன்னொரு புறம் காஞ்சி சங்கராச்சாரியாரோடும் நட்பாக இருப்பார். பெருந் தலைவர் காமராஜரை தலைவராக ஏற்றார்.
அவர் உடல்தான் மறைந்திருக்கிறதே தவிர அவர் லட்சக்கணக்காக மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்." என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிவாஜியுடன் பணியாற்றிய நடிகை வாணிஸ்ரீ, வெண்ணிற ஆடை நிர்மலா, ஒய்.ஜி.மகேந்திரன், இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், ஒளிப்பதிவாளர் எம்.விஸ்வநாத் ராய் ஆகியோருக்கு சிவாஜி விருது வழங்கப்பட்டது.