புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (14:20 IST)

ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிப்போம் – அமைச்சர் வேலுமணி டிவீட் !

கடந்த சிலமாதங்களாக சென்னை மக்கள் போதுமான தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்ட நிலையில் தற்போது பெய்யும் மழையை சேமிக்க வேண்டுமென அமைச்சர் வேலுமணிக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 3 மாதங்களாக சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்கள் குடிநீர் மற்றும் வீட்டு உபயோக நீர் இல்லாமல் அல்லாடினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழைப் பெய்து மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.  இதனால் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து மக்கள் பேச ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘அரசு தொடர்ந்து தனது கடமையை செய்து ஒவ்வொரு குடிமகனுக்கும்  தேவையான தண்ணீரைக் கொடுக்க முயல்கிறது. ஆனால், மழை சேமிப்பைக் குழுவோ, ஒரு அமைப்போ, ஒரு அரசோ மட்டும் செய்து முடிப்பது அவ்வளவு சுலபமல்ல. அவரவர் இருப்பிடத்தில் மழை நீரை சேமிப்பதே இதற்கு நிரந்தர தீர்வாகும். முன்னாள் முதல்வர் அம்மாவின் பாதையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மழைநீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார். தமிழக மக்கள் அனைவரும் வட கிழக்கு பருவ மழைக்கு முன், மழைநீரை சேமிக்கும் மகத்தான பணியில் ஈடுபடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிப்பது என்று உறுதி கொள்வோம்.’ எனக் கூறியுள்ளார்.