செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 மார்ச் 2019 (10:24 IST)

என்னைக் கொல்ல நினைக்கின்றனர் – வேல்முருகன் பரபரப்பு புகார் !

தன்னைக் கொல்ல வடமாநில கும்பல் ஒன்று திட்டமிட்டுள்ளதாகவும் அதனால் தனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் வேல்முருகன் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் நேற்று முன்தினம் காலையில் சென்னை நோக்கி வந்தபோது மதுராந்தகம் அருகேயுள்ள தொழுப்பேடு சுங்கச்சாவடியில் அவரது காரும் அவருடைய டிரைவரும் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த தாக்குதலுக்கு சுங்கக்கட்டணம் செலுத்துவது தொடர்பான பிரச்சனையேக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை சந்தித்த வேல்முருகன் தனக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டும் எனக் கூறி கோரிக்கை வைத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘நான் சென்ற ஆடி கார் இந்தியா முழுவதும் சுங்கக்கட்டணம் செலுத்தாமல் செல்லுவதற்காக பாஸ் எடுக்கப்பட்ட காராகும். இதற்காக நாங்கள் பல்லாயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம். இதன்படி பல சுங்கச்சாவடிகளில் நாங்கள் கட்டணமில்லாமல் சென்றோம்.

என்னைக் கொல்ல வேண்டும் திட்டமிட்டுள்ள வடமாநில கும்பல் ஒன்று விக்கிரவாண்டி சுங்கச்சாவடிக்கு தகவல் கொடுத்து நாங்கள் சாவடியைத்தாண்டிய பின்னர் எங்கள் காரை மறித்துத் தாக்க ஆரம்பித்தது. அவர்கள் எங்கள் ஆடி காரையும் எனது டிரைவரையும் தாக்கினர். முன்பு எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அனைத்தையும் திரும்பப் பெற்றுவிட்டனர்.நான் அரசியல் பரப்புரையில் ஈடுபட்டால் மாற்றம் ஏற்பட்டு விடும் என்று எண்ணி என்னைக் கொல்ல சிலர் திட்டமிட்டுள்ளனர். எனவே உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளேன். எனக் கூறினார்.