11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்காது..! – வைத்திலிங்கம் உறுதி!
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்காது என வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. சில நாட்கள் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த பேச்சால் பரபரப்பு எழுந்த நிலையில் எந்த வித தீர்மானமும் நிறைவேறாமல் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.
இந்நிலையில் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ல் நடைபெறும் என அதிமுக சபாநாயகர் தமிழ்மகன் உசேன் அறிவித்திருந்தார். ஆனால் பொதுக்குழு கூட்டத்தை சபாநாயகர் முடிவு செய்ய உரிமையில்லை. ஒருங்கிணைப்பாளர்தான் முடிவு செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்த பொதுக்குழு கூட்டம் குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் ”ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறாது. முன்னதாக நடந்த அதிமுக கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினரல்லாத 600 பேர் உள்ளே புகுந்துள்ளனர். அதனால்தான் பிரச்சினை எழுந்தது. பிரச்சினைகளை களையாமல் பொதுக்குழு கூட்டம் நடத்த முடியாது” என்று பேசியுள்ளார்.