செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (07:46 IST)

மதிமுகவின் எதிர்காலம் வைகோ மகனா – வாரிசு அரசியலில் மதிமுக !

தமிழகத்தில் உள்ள எந்த கட்சியில் வாரிசு அரசியல் இருந்தாலும் எங்கள் கட்சியில் அது இருக்காது என சொன்ன வைகோ இப்போது தன் மகனை கட்சியில் முன்னிறுத்தும் வேலைகளை செய்து வருகிறார்.

திமுக-வில் இருந்த வைகோ அங்கே வாரிசு அரசியல் செய்யப்படுவதாக புகாரினைக் கூற அவரைக் கட்சியை விட்டே நீக்கினார் கலைஞர். இதையடுத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். ஆனால் தன் மீது கொலைப்பழி சுமத்திய கலைஞரோடும், தன்னை பொடா சட்டத்தில் சிறைக்கு அனுப்பிய ஜெயலலிதாவோடும் மாறி மாறி கூட்டணி வைத்ததால் அவரது இமேஜ் தமிழக அரசியலில் அதளபாதாளத்துக்குப் போனது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், ஒரு ராஜ்யசபா உறுப்பினரும் அக்கட்சி பெற்றுள்ள நிலையில் கட்சித் தலைமையில் தனது மகன் துரை வையாபுரியை முன்னிலைப்படுத்த வைகோ முயன்று வருகிறார். சமீப காலமாக கட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் தலைகாட்டுகிறார் துரை. அதுமட்டுமில்லாமல் மதிமுக சார்பில் 2020 ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட காலண்டரில் வைகோ, அவரது தாயார் மற்றும் அவரது மகன் துரை புகைப்படம் ஆகியவை இடம்பெற்றுள்ளதோடு, வைகோவின் புகைப்படத்துக்கு மேல் ’நிகழ்காலமும்’ எனவும் துரை புகைப்படத்துக்கு மேலே ’எதிர்காலமும்’ எனவும் எழுதப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.