புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 5 அக்டோபர் 2019 (14:33 IST)

பிரதமருக்கு கடிதம் எழுதினால் சிறைதண்டனையா? – ஸ்டாலின், வைகோ கண்டனம்

திரைப்பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதற்காக தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது குறித்து பல்வேறு அரசியல், சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஸ்டாலின் மற்றும் வைகோ ஆகியோரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.

நாட்டில் பல இடங்களில் “ஜெய் ஸ்ரீ ராம்” சொல்ல சொல்லி மக்களை தாக்கியது, மாட்டுக்கறி உண்பதற்காக மக்கள் மேல் தாக்குதல் தொடுப்பது உள்ளிட்ட சம்பவங்களை மேற்கோள் காட்டி பிரதமர் இதுகுறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மணிரத்னம், அனுராக் காஷ்யப், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் கடிதம் எழுதி அனுப்பினர்.

அவர்களது கடிதம் மத உணர்வுகளை புண்படுத்தும்படியும், தேச நலனுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாக கூறி சங் பரிவார் அமைப்பை சேர்ந்த ஒருவர் பீகார் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். அதை விசாரித்த நீதிமன்றம் 49 பிரபலங்களின் மேலும் தேச துரோகம், பொது தொல்லை, மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட தண்டனை சட்டங்களில் வழக்கு பதிவு செய்துள்ளது.

இதற்கு தமிழக சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தனது கண்டனத்தை பதிவு செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்” என கேட்டு கொண்டுள்ளார்.

மதிமுக தலைவர் வைகோ “சமூகத்தில் மத துவேஷமாக நடந்து கொண்டவர்களை கைது செய்யாமல், அதுகுறித்து புகார் அளித்தவர்கள் மீது கைது நடவடிக்கைகளை முடுக்கி விடுவதுதான் ஜனநாயக அரசின் பணியா? மக்களின் கருத்து உரிமையை பறிக்கும் ஜனநாயக விரோத போக்கை அரசு கைவிட வேண்டும்” என கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் “ஜனநாயக நாட்டில் எந்தவொரு கருத்தையும் சொல்ல மக்களுக்கு உரிமையுண்டு. அந்த வகையில் பிரதமருக்கு கடிதம் அனுப்பவும், வினா எழுப்பவும் உரிமை உண்டு. அதற்கு பதில் அளிக்க வேண்டியது பிரதமரின் கடமையாகும்.

ஆனால் பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக அவர்கள் மேல் தேச விரோத வழக்கு தொடுப்பதெல்லாம் இதுவரை இந்திய வரலாற்றில் காணாத ஒன்று” என கருத்து தெரிவித்துள்ளார்.