1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 1 மார்ச் 2021 (15:31 IST)

மூன்றே மாதத்தில் 225 ரூபாய் அதிகரிப்பு… சமையல் எரிவாயு விலை குறித்து வைகோ கண்டனம்!

தொடர்ந்து சமையல் எரிவாயுவின் விலை அதிகமாகிக் கொண்டே வருவதால் மக்கள் கடுமையான சுமைக்கு ஆளாகியுள்ளனர்.

இது சம்மந்தமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:-

மத்திய பாஜக அரசு தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி மக்கள் மீது பேரிடியை விழச் செய்து வருகின்றது. பிப்ரவரி 25 ஆம் தேதி சிலிண்டர் விலையை ரூ.25 உயர்த்திய மத்திய அரசு, மூன்று நாட்களுக்குள் மீண்டும் ரூ.25 விலையை அதிகரித்து இருக்கின்றது. கடந்த 2020, டிசம்பர் மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.594 ஆக இருந்தது. இன்று மார்ச் 1, 2021 இல் ரூ.819 ஆக உயர்ந்துவிட்டது.

டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான இந்த மூன்றே மாதத்தில் சமையல் எரிவாயு விலை ரூ.225 ஆக உயர்த்தப்பட்டு இருக்கின்றது. பெட்ரோல், டீசலுக்கு விலை நிர்ணயம் செய்வதைப் போன்று, சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் நாள்தோறும் விலையைத் தீர்மானிக்கும் வகையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி, மக்களைச் சூறையாடி வருவது கடும் கண்டனத்துக்கு உரியது.

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை குறையவில்லை. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளால் மீள முடியாத துயரப்படுகுழியில் சாதாரண மக்கள் தள்ளப்பட்டு வருவது ஏற்கத்தக்கது அல்ல. மத்திய அரசு உடனடியாக சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்".