கொடைக்கானலையும் விட்டு வைக்காத வெயில்.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி..!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக அடித்து வரும் நிலையில், கொடைக்கானலிலும் வெயில் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான கொடைக்கானலில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். எனவே, கோடை காலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதுண்டு. இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கோடை வெயிலின் தாக்கம் கொடைக்கானலையும் விட்டு வைக்கவில்லை.
கடந்த சில தினங்களாக படிப்படியாக கொடைக்கானலில் வெப்பம் அதிகரித்து வருவதாகவும், தினமும் இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கொடைக்கானலில் உள்ள வீடுகளில் மின்விசிறி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. முக்கிய அருவிகளில் நீர் குறைந்து வருவதால் வெப்பம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று பகலில் கொடைக்கானலில் 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva