தடையின்றி குடிநீர்..! 150 கோடி நிதி ஒதுக்கீடு..! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!
கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவதற்காக 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, மின்சாரத்துறை, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும் என்று அவர் கூறினார். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும் என்றும் தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முதல்வர் உத்தரவிட்டார்.
கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும் எனத் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.