1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (14:45 IST)

எனக்கு அமைச்சர் பதவி எதுவும் வேண்டாம்! – கோவையில் உதயநிதி பேச்சு!

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என பலரும் பேசி வருவது குறித்து கோவையில் நடந்த கூட்டத்தில் உதயநிதியே விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின் திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்து வந்தார். பின்னர் கட்சி செயல்பாடுகளில் தீவிரமாக இயங்க தொடங்கிய அவருக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகவும் ஆனார் உதயநிதி ஸ்டாலின்.

சமீபமாக உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து திமுகவில் உள்ள முக்கிய புள்ளிகள் பேசி வருவதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் உதயநிதி அமைச்சர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்து அன்பில் மகேஷ், கே.என்.நேரு, மூர்த்தி ஆகியோர் பேசியிருந்தனர்.

இந்நிலையில் இன்று கோவையில் நடந்த விழா ஒன்றில் உதயநிதி கலந்து கொண்டபோது அவர் அமைச்சராக வேண்டும் என வலியுறுத்தி பொங்கலூர் பழனிசாமி பேசினார். பின்னர் அதற்கு பதிலளித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் “நான் எந்த பொறுப்புக்கும் ஒருநாளும் ஆசைப்படவில்லை. தலைவருக்கும், உங்களுக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.