இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் - ரூட்டை மாற்றிய தினகரன்
தமிழகத்தில் முதல்வரை மாற்ற முடியாவிட்டால் தற்போதுள்ள ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம் என அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி என இரண்டாக பிரிந்திருந்த அதிமுக, தற்போது எடப்பாடி அணி மற்றும் தினகரன் அணி என இரண்டாக பிரிந்துள்ளது. மேலும், நாளை சென்னை வானகரத்தில் நடைபெறவிருந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு பெங்களூர் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தினகரன் “ இந்த ஆட்சி நீடிப்பது தமிழக மக்களுக்கும், கோடான கோடி அதிமுக தொண்டர்களுக்கும் நல்லதல்ல. இவர்கள் பதவிகளுக்காக மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஏற்றிவிட்ட ஏணிகளையே மிதித்து தள்ளுகின்றனர். பதவி இல்லையெனில் ஓ.பி.எஸ்-க்கு தூக்கம் வராது. எனவேதான், தர்ம யுத்தம் என நாடகம் ஆடி துணை முதலமைச்சர் பதவியை வாங்கிக் கொண்டார்.
இந்த ஆட்சி தொடர்வதை மக்களே விரும்பவில்லை. எனவே இந்த முதல்வரை மாற்ற முயற்சிப்போம். அல்லது தமிழகன் நலன் கருதி, இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்து விட்டோம் ” எனக் கூறினார்.
எங்களால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆட்சியை கவிழ்க்க மாட்டோம். ஆட்சிக்கு ஆபத்து வராது என கூறிவந்த தினகரன், தற்போது நேரிடையாகவே, இந்த ஆட்சியை அகற்றுவோம் எனக் கூறியிருப்பது, அவர் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறிவிட்டார் என்பதைக் காட்டுகிறது.
திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் வருகிற செப்டம்பர் 16ம் தேதி, டிடிவி தினகரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. நீட் தேர்வு விலக்கு கோரி பொதுக்கூட்டம் நடைபெறும் என தினகரன் அறிவித்திருந்தார். ஆனால், இந்த கூட்டத்திற்கு நகராட்சி அனுமதி அளிக்க முடியாது என இன்று அறிவித்துள்ளது. மேலும், தினகரன் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு ஆளும் அரசால் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமி அரசின் செயல்பாட்டினால், கோபமடைந்த டிடிவி தினகரன் ‘இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம்’ என்கிற நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டார் என்பதை இந்த பேட்டி காட்டுகிறது.