1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (17:01 IST)

கஜானா காலி, ஊழியர்கள் மீது நெருக்கடி... டிடிவி ஆவேசம்!

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதிய தொகை வழங்கப்படாது என அறிவித்துள்ளதை கண்டித்துள்ளார் டிடிவி தினகரன். 

 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பிற்காக பல்வேறு வகைகளில் நிதிகள் திரட்டி வருகிறது.
 
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பிற்கான ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஓராண்டுக்கு இந்த ஊதியம் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஓராண்டுக்கு 15 நாள் ஈட்டிய விடுப்பின் ஊதியம் நிறுத்தப்படுகிறது.
 
இந்நிலையில் இதனை கடுமையாக கண்டித்து அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு... 
 
நெருக்கடியான நேரத்தில் களத்தில் நின்று அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிவரும் சுகாதாரம், உள்ளாட்சி, வருவாய், கூட்டுறவு துறை ஊழியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கான அகவிலைப்படி உயர்வு, ஈட்டியவிடுப்பு ஆகியவற்றை நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல. 
 
மேலும் இவர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (P.F) வழங்கப்படும் வட்டியைக் குறைத்திருப்பதும் சரியானதல்ல. தங்கள் பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றிக்காக இந்தப்பணத்தை நம்பியிருக்கும் ஊழியர்கள் அரசின் முடிவால் பாதிக்கப்படுவார்கள். 
 
தமிழக அரசு கஜானாவில் இருந்து தேவையற்ற முறையில் செல்லும் எத்தனையோ செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு, அரசு எந்திரத்திற்கு அச்சாணியாக இருப்பவர்கள் தலையிலேயே நிதி நெருக்கடியை சுமத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்? என கேள்சி எழுப்பியுள்ளார்.