செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 17 ஜூன் 2017 (10:35 IST)

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நெருக்கடி - ஆலோசனையில் எடப்பாடி

கட்சியில் தினகரனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என அவரின் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறித்து முக்கிய அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


 

 
தினகரனுக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏக்கள் 34 பேர் உள்ளனர். அவர்களும் மற்றும் தினகரன் ஆதரவு அமைச்சர்கள் சிலரும் கடந்த 15ம் தேதி கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து சில நிபந்தனைகள் விதித்தனர்.
 
உங்கள் ஆட்சியை அவர் கவிழ்க்க மாட்டார். ஆட்சியை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். கட்சியை அவர் பார்த்துக்கொள்வார்.  கட்சியில் தினகரனுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கட்சி தொடர்பான நிகழ்ச்சிகள் அவர் தலைமையின் கீழ் நடக்க வேண்டும். அவர் தினமும் தலைமை செயலகத்துக்கு வருவார். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும், கட்சி பணியாற்ற அவரை நீங்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், இதற்கு நீங்கள் ஒத்துழைக்காவிட்டால், ஜனாதிபதி தேர்தலில் உங்கள் நிலைப்பாட்டிற்கு எதிராக நாங்கள் வாக்களிப்போம் என அவர்கள் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
தினகரன் மீண்டும் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்கிற கோரிக்கை, எடப்பாடி தரப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி அன்று மாலை, அதிமுக தலைமை அலுவலகத்திற் சென்று, மூத்த அமைச்சர்கள்,  மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் நிபந்தனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 
 
அதில், தினகரனிடம் மீண்டும் கட்சி பொறுப்பை ஒப்படைக்க  பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், குடியரசுத் தலைவர் தேர்தலை முன் வைத்து தினகரன் ஆதரவாளர்கள் தங்களை மிரட்டுவதையும் அவர்கள் ரசிக்கவில்லை எனத்தெரிகிறது.  எனவே, நேற்று கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. 
 
இந்த விவகாரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதால், தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை செய்து வருகிறார்.