திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: செவ்வாய், 6 ஜூலை 2021 (15:53 IST)

மேகதாது குறுக்கே அணை… டிடிவி தினகரன் முதல்வருக்கு அறிவுறுத்தல்!

கர்நாடகா மாநிலம் மேகதாது குறுக்கே அணைக் கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா முதல்வருக்கு இடையே கடிதப் போக்குவரத்து நடந்து வருகிறது.

இது சம்மந்தமாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘மேகதாது பகுதியில் அணைகட்டியே தீருவோம் என, கர்நாடக அரசு கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அப்படி ஓர் அணை உருவானால் ஒட்டுமொத்த தமிழகமும் பெரும் பாதிப்புக்கு ஆளாகும். எனவே, தமிழக அரசு கடிதம் மட்டும் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகதாது அணை பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். நீதிமன்றத்தின் வழியாகவும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இதேபோல், வடமாவட்டங்களின் பாசன ஆதாரமான தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய ஆற்றின் குறுக்கே ஊரடங்கு காலத்தில் கர்நாடகா புதிய அணையைக் கட்டி இருப்பது குறித்தும், இதற்காக கடந்த ஆட்சியில் தமிழகத்திலிருந்து கட்டுமான பொருட்கள் அனுப்பியதாக வெளியாகி உள்ள செய்திகள் பற்றியும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.