தினகரனிடம் உள்ள முக்கிய வீடியோக்கள் : சிக்கப் போகும் அதிமுக தலைகள்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் இன்னும் தினகரன் வசம் இருக்கிறது என செய்திகள் வெளிவந்துள்ளது.
மருத்துவமனையில் ஜெ. அனுமதிக்கப்பட்டது முதல் மரணமடைந்த வரை பல மர்மங்களும், மக்கள் மத்தியில் பல சந்தேகங்களும் எழுந்துள்ளது. காரணம், சிகிச்சையின் போது அவர் தொடர்பான எந்த ஒரு புகைப்படமும், வீடியோவும் வெளியாகவில்லை.
அந்நிலையில், கடந்த 20ம் தேதி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் எம்.எல்.ஏ ஜெ. தொடர்பான ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ஜெயலலிதா படுக்கையில் அமர்ந்தவாறு, பழச்சாறு பருகிக் கொண்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இதுவும் ஒரு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
ஜெ.வின் மரணத்தை வைத்து அரசியல் செய்து வரும் அதிமுக தலைவர்களுக்கு அந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் இதேபோன்று சுமார் 14 வீடியோக்கள் தினகரன் வசம் இருப்பதாகவும் அவை எப்போது வேண்டுமானாலும் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அந்த வீடியோக்களில் ஜெ.விற்கு சசிகலா உணவு பறிமாறுவது போலவும் சசிகலாவுடன் ஜெயலலிதா பேசிக்கொண்டிருப்பது போலவும் காட்சிகள் இருக்கின்றனவாம். அதிலும், அதிமுக பெரிய தலைகள் சிலரின் பெயரை குறிப்பிட்டு அவர்களின் ஊழல் பற்றி விசாரிக்க வேண்டும் என சசிகலா ஜெ.விடம் பேசுவது அதில் பதிவாகியுள்ளதாம். அந்த வீடியோக்கள் தற்போது தினகரன் வசம் இருப்பதாகவும், அவசியம் ஏற்படும் போது அதை அவர் வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.
ஜெ. தொடர்பான பல வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும், அதை வேளை வரும் போது வெளியிடுவோம் என தினகரன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.