ஆளும் கட்சி மீது சீறிய டிடிவி தினகரன்: காரணம் என்ன?

Sugapriya Prakash| Last Modified சனி, 4 ஏப்ரல் 2020 (14:42 IST)
கொரோனா உதவித்தொகை வழங்குவதில் ஆளுங்கட்சியினர்  தலையிடுவதாக புகார் எழுந்துள்ளது என டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு நிவாரணமாக ஆயிரம் ரூபாய் பணமும், ஏப்ரல் மாத ரேசன் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.  
 
அதன்படி ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் மக்கள் கூட்டம் ரேசன் கடைகளில் கூடுவதை தவிர்ப்பதற்காக வீட்டிற்கே வந்து டோக்கனுடன் நிவாரண பணமும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
 
இந்நிலையில், கொரோனா உதவித்தொகை வழங்குவதில் ஆளுங்கட்சியினர்  தலையிடுவதாக புகார் எழுந்துள்ளது என இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, 
கொரோனா பெருந்தொற்று நோயைத் தடுப்பதற்கான ஊரடங்கினால் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்காக அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.1,000 உதவித்தொகைக்கான டோக்கனை தஞ்சாவூரில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் வழங்கிய போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சுற்றிவளைத்து பிடித்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. 
 
ஆளும் கட்சியினரின் இந்த செயல், கொரோனா அச்சத்தால் பெரும் இழப்புக்கு ஆளாகியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு செய்யும் துரோகமாக அமைந்துவிடும். இதன் மூலம் ஆட்சியாளர்கள் அரசியல் ஆதாயம் தேட முனைவது சரியானதல்ல. 
 
இந்நிலையில் உதவித்தொகை அவரவர் வீடுகளில் நேரடியாக பணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருப்பது ஆளுங்கட்சியினரின் அத்துமீறலை இன்னும் அதிகப்படுத்திவிடுமோ என்ற சந்தேகத்தை மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.
 
எனவே, ஆளுங்கட்சியினரின் தலையீடு இல்லாமல், அரசு ஊழியர்களை வைத்து தகுதியுள்ள ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் முறையாக உதவித்தொகையை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :