ஆட்சியை கலைக்க குதிரை பேரம் ; 4 எம்.எல்.ஏக்கள் சிறை?
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க சில எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க தினகரன் தரப்பு குதிரை பேரம் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் இந்த கூட்டத்தில் முதல் முறையாக கலந்து கொண்டுள்ளார். ஆளுநர் தன்னுடைய உரையை தொடங்கியதுமே, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் “ மெஜாரிட்டி இல்லாத குதிரை பேர எடப்பாடி அரசை கலைக்க ஆளுநர் பன்வாரிலால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர அனுமதிக்கவில்லை. எனவே வெளிநடப்பு செய்தோம்” எனக் கூறியிருந்தார்.
ஆட்சியை நடந்த 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும் என்கிற நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு 111 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. எனவே, மெஜாரிட்டி இல்லாத எடப்பாடி அரசை கலைக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஏற்கனவே கூறி வருகின்றனர்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அது தொடர்பான வழக்கில் தங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வெளியாகும் என தினகரன் கருதுகிறார். அந்நிலையில், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமெனில் தினகரனுக்கு 24 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும். அதேபோல், நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டுவரவேண்டுமென்றால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களோடு சேர்த்து 109 பேர் இருக்க வேண்டும்.
சமீபத்தில் நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 104 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால், தங்கள் பக்க 112 பேர் இருப்பதாகவும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதில் நாங்களே வெற்றி பெறுவோம் என எடப்பாடி தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் போது எங்களின் ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் என தினகரன் தொடர்ந்து கூறிவருகிறார்.
இதற்கிடையில், ஆளுங் கட்சி எம்.எல்.ஏக்களில் மேலும் சிலரை தங்கள் பக்கம் இழுக்க தினகரன் தரப்பு ரகசிய பேச்சு நடத்தியுள்ளது எனவும், அப்போது நடத்தப்பட்ட குதிரை பேரத்தில் 4 எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் வர சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை மோப்பம் பிடித்த எடப்பாடி தரப்பு, அந்த 4 எம்.எல்.ஏக்களையும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், இதனால், தினகரன் தரப்பு முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.