புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 ஜூன் 2019 (17:04 IST)

கமலை பார்த்து காப்பியடிக்கும் டிடிவி தினகரன்? – திசை திருப்பும் திட்டமா?

டிடிவி தினகரனின் கட்சிக்குள் ஏகப்பட்ட களேபரங்கள் வெடித்துள்ள நிலையில் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சமூக பணிகளில் இறங்கிவிட்டார் டிடிவி தினகரன்.

டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்குள் பிரச்சினைக்கு மேல் பிரச்சினையாக அரங்கேறி வருகிறது. மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட தொடங்கின. ஆனால் எதுவும் வெளிப்படையாக தெரியாமல் இருந்தது. இந்நிலையில் மொத்த மக்களுக்கும் தெரியும்படி போனில் தினகரனை திட்டி பேசும் தங்க.தமிழ்செல்வனின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அமமுகவிலிருந்து பல நிர்வாகிகள் கழன்று கொள்ள இருப்பதாக தெரிகிறது. அவர்களை பின்வாசல் வழியாக அழைத்து கட்சியில் சேர்த்து கொள்ள அதிமுகவும் தயாராக இருப்பதாக தெரிகிறது.

ஆனால் இதை பற்றியெல்லாம் அலட்டி கொள்ளாமல் சமூக செயற்பாட்டாளர் கெட் அப்புக்கு தாவி விட்டார் டிடிவி தினகரன். நாளை கிராம சபை கூட்டங்கள் நடக்க இருப்பது குறித்த அறிக்கை வெளியிட்ட டிடிவி “மக்கள் அனைவரும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். தமிழகத்தை அழிக்க நினைக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களை தடுப்பதற்கு கிராம சபை கூட்டங்களே சரியான தீர்வு. கிராமசபை கூட்டத்தின் தீர்மானத்தில் நீதிமன்றத்தை தவிர வேறு யாராலும் குறுக்கிட முடியாது. ஆளுங்கட்சியும், அதிகாரிகளும் என்ன செய்தாவது இந்த திட்டங்களை நிறைவேற்ற நினைக்கிறார்கள். மக்கள்தான் இறங்கி வந்து தங்களுக்கான உரிமைகளை பெற வேண்டும்” என பேசியிருக்கிறார்.

அங்கே கட்சியே ஆட்டம் கண்டிருக்கும்போது இங்கே டிடிவி இப்படி ஒரு அறிக்கையை அளித்திருக்கிறார். இதன் மூலமாக கமலஹாசனின் சமூக செயற்பாட்டாளர் பிம்பத்தை டிடிவி காப்பியடிக்க நினைக்கிறாரோ என அமமுகவினரே குழம்பி போயுள்ளனர். கமலஹாசன் கட்சி தொடங்கியபோது அது பிரபலமடையவில்லை. அப்போது நடந்த கிராம சபை கூட்டத்தை பற்றி கமலும், அவரது கட்சி நிர்வாகிகளும் பட்டி தொட்டியெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலம் தங்களது கட்சியையும் பிரபலப்படுத்தினர். டிடிவியும் சமூக பணிகள் மூலம் கட்சியை பிரபலப்படுத்தும் ஐடியாவில் இறங்கிவிட்டார் என தெரிகிறது. எது எப்படியிருந்தாலும் கலைந்து வரும் கட்சியை இந்த செயல்பாடுகள் மூலம் எப்படி கட்டுக்குள் வைக்க போகிறார் என்பதுதான் டிடிவி தினகரனுக்கு இருக்கும் பெரிய டாஸ்க்.