விழுப்புரம் அருகே திடீரென நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்: பயணிகள் அவதி..!
விழுப்புரம் அருகே யூனிட் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக, வந்தே பாரத் ரயில் உள்பட பல ரயில்கள் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு இன்று காலை புறப்பட்ட யூனிட் ரயில், சிறிது நேரத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மொத்தம் 8 பெட்டிகள் கொண்டிருந்த இந்த ரயிலில், ஆறாவது பெட்டி மட்டும் திடீரென தண்டவாளத்தில் இருந்து இறங்கி தடம் புரண்டதாக தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ரயில்வே துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தடம்புரண்ட பெட்டியை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ரயில் தடம் புரண்டதனால், சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லவிருந்த வந்தே பாரத் ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதாகவும், இதனால் பொங்கல் தினத்தை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வந்தே பாரத் ரயிலுடன் பல ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நிலைமை இன்னும் சில மணி நேரங்களில் சீராகிவிடும் என ரயில்வே துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.